குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் அரச ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மியன்மாரின் அரச ஊடகமான குளோபல் நியூ லைற் ஒவ் மியன்மார் ( Global New Light of Myanmar ) என்ற ஊடகமே இவ்வாறு, பிரசூரித்த செய்தியை திருத்திக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
ரோஹினிய முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு மியன்மார் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை நீடித்து வருகின்றது.
இந்த நிலையில், ரோஹினிய முஸ்லிம்களுக்கு வீடமைப்பு திட்டமொன்றை உருவாக்க ஐக்கியநாடுகள் அமைப்பு மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் இந்த செய்தியை மியன்மார் அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் மறுத்திருந்தன. வீடமைப்பு திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் போதிலும் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளன.
பேச்சுவார்த்தைகள் தொடர்கின்ற போதிலும் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை எனவும், பிழையான செய்தி வெளியிட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகவும் குளோபல் நியூ லைற் ஒவ் மியன்மார் ஊடகம் தெரிவித்துள்ளது.