யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் கொலை தொடர்பான காவற்துறையினரின் விசாரணையில் CC TV காணொளி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மனின், கொலையில் துப்புதுலக்குவதற்காக, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த 25 ஆம் திகதி மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இளைஞனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வாகனத்தினை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் இடம்பெற்றது.
கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதிமன்றத்தில் பெறப்பட்டு அதனடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி மாலை திடீரெனச் சென்ற குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தியுள்ளனர். எனினும் அங்கு அத்தகையதொரு தடயமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள குறித்த குழுவினர் தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற CC TV காணொளியில், சம்பவம் இடம்பெற்ற தினம் அந்தப் பகுதியில் சென்ற முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் காணப்படுகிறது. இவை குறித்து பார்வையை திருப்பியுள்ள காவற்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வாகன பிரசன்னம் குறித்து விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இந்த CC TV காணொளியில் உயிரிழ்ந்த இளைஞர் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று செல்வது பதிவாகியுள்ளது.
உயிரிழந்த இளைஞர் செல்வதை தொடர்ந்து மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடரும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த தடயங்களை அடிப்படையாகக்கொண்டு முச்சக்கரவண்டியையும், மோட்டார் சைக்கிளையும், விசாரணை வலையத்துள், காவற்துறையினர் கொண்டு வந்திருப்பதுடன், கொலையாளிகளை இனம் காணும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை இந்தக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த யாழ் காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள காவற்துறைமா அதிபர், கொழும்பில் இருந்து காவற்துறை உயர் அதிகாரி திசேரா தலமையிலான குழுவனிரை விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை டொன் பொஸ்கோ ரிக்மனின் கொலையில் பல மர்மங்கள் வெளிவராது இருப்பதாகவும், இதனைத் திசை திருப்பவே காவற்துறை இந்த CC TV காணொளியை வெளியிட்டு இருப்பதாகவும், கடற்படை முகாம், விசேட அதிரடிப்படை முகாம் என தேடுதல்களை மேற்கொண்டதாகவும், யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று யாழ் சென்றடைந்த கொழும்பின் உயர்மட்ட காவற்துறை விசாரணைக் குழு கொலையின் உண்மையை வெளிக்கொண்டு வருமா? இன்றி கொலையாளிகளை பாதுகாக்குமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க முடியும் என யாழ் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.