இலங்கை பிரதான செய்திகள்

ஏக்கிய இராச்சிய” என்பதற்கு பதிலாக “எக்சத் ரட்ட” என பாவியுங்கள். – சி.வி.

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் அமைச்சரவை இன்று கூடவிருக்கும் சூழ்நிலையில்இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட “ஏக்கிய இராச்சிய” என்ற சொல் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒருவிதமான ஒற்றை ஆட்சி என்றே குறித்த சிங்கள சொல்லிற்கு மொழி பெயர்ப்புக்கள் தரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
எந்தவிதமான சொல் ஜாலங்களின் ஊடாகவும் நாங்கள் உண்மையை மறைக்கக்கூடாது. ஒற்றை ஆட்சிக்கு இன்னொரு பெயரே “ஏக்கிய இராச்சிய”. இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வருவதும் ஒற்றை ஆட்சி முறையே. ஒற்றை ஆட்சி முறையைக் கடைப்பிடித்ததால்த்தான் இந் நாட்டில் இன முரண்பாடுகளும் இனத் துவேசங்களும் இனத்தையொட்டிய நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.
 ஒற்றை ஆட்சி என்று கூறும் போது அல்லது “ஏக்கிய இராச்சிய” என்று அதற்கு மறு பெயர் வைக்கும் போது அல்லது கபடத்தனமாக ஒருமித்த நாடு என்ற சொல் பாவிக்கப்படும் போது அதன் அர்த்தம் பெரும்பான்மையினருக்கு சொந்தமான நாடு என்பதே.
கடந்த 100 ஆண்டுகளில்த்தான் இவ்விதமான கருத்து மேலோங்கி வந்துள்ளது.  உண்மையில் “எக்சத் இராச்சிய” என்ற சிங்கள சொல்லுக்கமைவாகவே இந்த நாட்டின் ஆட்சி இருக்க வேண்டும். ஐக்கிய ஆட்சிக்கு உட்பட்ட நாடு என்றே இந்த நாடு குறிப்படப்பட வேண்டும். ஐக்கிய என்று கூறும் போது பல்வேறு இனங்களையும் உள்ளடக்கி அவ்வவ் இனங்களுக்குரிய சம உரிமையை வழங்கி அவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் ஒரு அரசியல் முறையே ஐக்கிய ஆட்சி என்ற முறை. இனரீதியாவோ, மத ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ வெவ்வேறு இனங்களை, மதங்களை, மொழிகளை உள்ளடக்கிய மக்கட் கூட்டங்கள் ஒரே நாட்டினுள் தத்தமக்குரிய உரிமைகளையும், உரித்துக்களையும் பேணிக்கொண்டு தமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் சேர்ந்து அமைக்கும் அரசியல் முறையே அதுவாகும்.
இலங்கையில் இன முரண்பாடு ஆங்கிலேயர் காலத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் சகல இனங்களையும் சமமாகப் பாவித்து அவர்களின் பிரதி நிதிகளையேற்று ஆங்கிலேயர்களால் 1919ம் ஆண்டு வரையில் ஆட்சி நடாத்தப்பட்டு வந்தது. எப்பொழுது பெரும்பான்மை அரசியல் வாதிகளின் கோரிக்கைக்கு  அமைய பிரதேச ரீதியாக மக்களைத் தேர்ந்தெடுத்து முழு நாட்டிற்கும் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் முன்வந்தார்களோ அப்பொழுதுதான் இன முரண்பாடு ஏற்பட அது வழிவகுத்தது.
எனது தாய் வழி உறவினர் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் இதற்கு ஒரு காரண கர்த்தாவாக அமைந்தமை மனவருத்தத்திற்குரியது. ஆனால் சிங்கள அரசியல்த் தலைவர்களின் கபடத்தை அறியாமல் நம்பிக்கையின் பொருட்டே இவ்வாறானதொரு ஒற்றை ஆட்சி ஏற்பட அவர் காரணகர்த்தாவாக விளங்கினார்.
ஆங்கிலேயர் எம்மைவிட்டுச் செல்லும் வரை சிங்களத் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு சம உரித்துக்கள் கொடுத்து ஒரு பெரிய சகோதரன் போன்று அவர்களை அரவணைத்து நாங்கள் நாட்டை நடாத்துவோம் என்று கூறிவந்தமையினால்த்தான் ஆங்கிலேயர்கள்  அவர்கள் தந்த முதல் அரசியலமைப்பில் 29வது உறுப்புரையில் ஒரேயொரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒற்றை ஆட்சிக்கு வித்திட்டார்கள்.
ஆனால் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு சுதந்திரம் அளித்துச் சென்ற மறு வருடமே அத்தனை இந்திய வம்சாவழித் தமிழர்களுக்குரிய வாக்குரிமையும் அரசாங்கத்தால்ப் பறிக்கப்பட்டது. 1956ல் பெருவாரியாக அரசாங்க சேவையில் ஈடுபட்டிருந்த வட கிழக்குத் தமிழ் மக்களின் உரித்துக்களைப் பறிப்பது போன்று சிங்களம் மட்டும் சட்டம் (தனிச்சிங்களச் சட்டம்) கொண்டுவரப்பட்டது.
வட கிழக்கானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது மறைக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் சிங்கள மொழி திணிக்கப்பட்டது. 1964ம் ஆண்டளவில் கிறிஸ்தவர்களின் அதிகாரத்திற்குட்பட்டிருந்த பெருவாரியான தனியார் கல்வி நிறுவனங்களும் பாடசாலைகளும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. 1971ம் ஆண்டளவில் கல்வியில் தரப்படுத்தல் என்ற கோட்பாட்டின் கீழ் தமிழ் மாணவ மாணவிகளின் உயர்கல்வி பாரிய பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது.
எனவே ஒற்றை ஆட்சியின் மூலமாக பெரும்பான்மையின மக்கள் அதிகாரத்தைத் தம்வசம் பெற்றுக் கொண்டு மற்றைய மக்களுக்கெதிரான பலவிதமான பாதிப்புச் செயல்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார்கள். அதிகாரம் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் கைகளுக்குச் சென்றமையே மற்றைய மக்கள் பாதிப்படையக் காரணமாய் அமைந்தது.
 எனவே அவ்வாறான நிலைமை தொடர்ந்து இருந்தால் இந்த நாடு பெரும்பான்மை மக்களின் நாடு என்றாகிப் பெரும்பான்மை மதத்தையும், பெரும்பான்மை மொழியையும் சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்தும். பெரும்பான்மையினர் தாமாக முன்வந்து தருவதை மட்டுமே மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
சரித்திர ரீதியாக இவ்வாறான ஒரு நிலை ஏற்படுவதற்கு காரணங்கள் இருந்தனவா என்று ஆராய்வோம்.
சிங்கள மொழி ஒரு மொழியாக நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது கிறிஸ்துக்குப் பின் 6 ம் நூற்றாண்டளவிலேயே. அதற்கு முன்னர் சிங்கள மொழி இந்த நாட்டில் இருக்கவில்லை. அது ஜனிக்கவில்லை. சிங்கள மொழியானது பாளிச் சொற்களைப் பெரும்பான்மையாகவும் தமிழ்ச் சொற்களை சுமார் 40 வீதமாகவும் வேடர் மொழி போன்ற நாட்டுப்புற மொழி வழக்குகளையுந் தன்வசமடக்கிய மொழி. அண்மைய மரபணுப் பரிசோதனைகள் (DNA) இன்றைய சிங்கள மக்களின் மூதாதையர்கள் திராவிடரே என்று நிச்சயப்படுத்தியுள்ளன.
எனவே சிங்களவர்கள் தம்மைப் பௌத்தர்களாக அடையாளப்படுத்தக்கூடிய நிலைமை சிங்கள மொழி பிறந்ததன் பின்னரேயே ஏற்பட்டது. அதற்கு முன்னர் பௌத்த மதத்தைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் தமிழ் பௌத்தர்களே. இதைப்பற்றி அண்மையில் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்கள் “தெமள பௌத்தயோ” என்ற தலையங்கத்தின் கீழ் ஒரு ஆராய்ச்சி நூல் வெளியிட்டிருந்தார்.
அக்காலத்தில் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழ்ப் பேசிய திராவிட மக்களே என்றும் இன்று வட கிழக்கில் காணப்படும் பௌத்த மத எச்சங்கள் அவர்களால் விட்டுச் செல்லப்பட்டவையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வட கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை. தமிழ் பௌத்தர்கள் பல நூற்றாண்டுகள் இங்கு வாழ்ந்து தென்னிந்தியாவிலே நாயன்மார்களின் பக்தி மார்க்கம் வளர்ச்சி அடைந்த போது இங்கும் அதன் எதிர் ஒலியாக பௌத்தர்கள் சைவ சமயத்திற்கு மாறினார்கள்.
அதாவது முன்னர் சைவ சமயத்தில் ஊறி இங்கிருந்த திராவிட மக்கள் சில நூற்றாண்டுகள் காலமாக பௌத்தத்தைத் தழுவி வாழந்து மீண்டும் சைவ மதத்திற்கே சென்றுவிட்டார்கள். எனவே வட கிழக்குத் தமிழ் மக்கள் பௌத்த மதத்தை ஏற்றுக் கைவிட்டமையால் அவர்கள் அம் மதத்தை நிராகரித்ததாகவே நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“ஏக்கிய இராச்சிய” என்ற பெயரின் கீழ் ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்தி பௌத்தத்தை வட கிழக்கு மாகாணங்களில் திணிப்பது அம் மாகாணங்களைத் தாயகமாகக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு துரோகத்தை உண்டுபண்ணும் ஒரு செயல் ஆகும்.
அத்துடன் அவர்களுடைய மனித உரித்துக்களையும், உரிமைகளையும் பறிப்பதாக அமையும். இந் நிலையிலே “ஏக்கிய இராச்சிய” என்றோ, ஒற்றை ஆட்சி என்றோ, ஒருமித்த நாடு என்றோ பௌத்த சிங்கள மக்களின் ஆதிக்கத்தை இந் நாட்டில் தொடரச் செய்வது இன முரண்பாட்டையும் இன அழிப்பையும் ஓரின, ஒரு மத ஆதிக்கத்தையும் தொடரச் செய்வதாக அமையும்.
இந் நாட்டில் இன முறுகல் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றால் சகல இன மக்களையும் சமமாகக் கருதி அவர்கள் யாவரையும் உள்ளடக்கி ஒரு அரசை நிறுவுவதே பொருத்தமான நடவடிக்கையாகும். அவ்வாறு நிறுவும் போது ஐக்கிய அரசு அல்லது ஐக்கிய நாடு என்ற சொல்லின் கீழ் “எக்சத் ரட்ட” என்றே குறிப்பிட வேண்டியிருக்கும்.
அந்த வகையில் சிங்கள மக்களுக்கும், இலங்கையில் வாழ்ந்த பாரம்பரிய தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும், மலையக மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய நாடாகவே இலங்கை பரிணமிக்க வேண்டும்.
இதனால்த்தான் ஒரு சம~;டி அரசை அமைக்க வேண்டும் என்று 1949ம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கட் தலைவர்கள் கூறி வருகின்றார்கள். அதற்கு முன்னர் கண்டிய மக்கட் தலைவர்களும் சம~;டி அரசியல் முறையையே விரும்பியிருந்தார்கள்.
உண்மையில் 9 மாகாணங்களுக்கும் சம~;டி அடிப்படையில் அலகுகள் நிர்ணயிக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மாகாண அரசுகள் நிறுவப்பட்டு அவற்றை உள்ளடக்கிய ஐக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படலாம். அத்துடன் அவற்றுள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் தேவையெனில் தமக்குள் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அதற்கான உரித்து வழங்கப்டலாம்.
முஸ்லீம் மக்கள், சிங்களம் பேசும் முஸ்லீம் மக்கள்  தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் என்று வாழ்ந்து இலங்கையில் வருவதனால் அவர்களுக்கென்று அவர்கள் பெருவாரியாகச் செறிந்து வாழும் இலங்கையில் கிழக்கு மாகாணங்கள் போன்ற இடங்களில் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இனங்கள் யாவும் ஒன்று சேர்ந்தால் ஐக்கிய இலங்கை என்ற அரசியல்க் கொள்கையை நிலை நாட்ட முடியும். எனவே ஐக்கிய இலங்கை என்ற கொள்கை உருவாவதற்குத் தமிழ் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமது ஆதரவைத் தெரியப்படுத்துதல் அத்தியவசியம் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த விடயத்தில் எமக்குள் மாறுபாடுகள் இருக்கக் கூடாது.
இதனால் பௌத்த சிங்கள மக்கள் தமது அதிகாரங்களைப் பறிகொடுக்கப் போகின்றோம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முன் வருவார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு விடயத்தை மனதில் நிலைநிறுத்த வேண்டும்.
கபடமாகவும் பொய்யாகவும் ஆங்கிலேயருக்கு உறுதி மொழியை அளித்தே இவ்வாறானதொரு செயற்கை நிலையை சிங்கள அரசியல்த் தலைவர்கள் இவ்வளவு காலமும் ஏற்படுத்தி வந்துள்ளனர். உண்மை என்னவென்றால் எந்தக் காலத்திலும் இந் நாடு சிங்கள பௌத்த நாடாக இருக்கவில்லை. சிங்கள மொழி வருவதற்கு முன்னரிருந்தே வடகிழக்குத் திராவிட மக்கள் பௌத்த மதத்தைச் சார்ந்திருந்து அதனைக் காலக் கிரமத்தில் கைவிட்டு இந்து மதத்திற்கு மீண்டும் திரும்பியிருந்தார்கள். இவற்றை எங்கள் சிங்கள மக்கள் அறிந்து கொண்டார்களேயானால் அவர்கள் மனோநிலை மாற வாய்ப்பிருக்கின்றது.
அதற்கு சிங்கள அரசியல்த் தலைவர்கள் இடமளிக்காவிடின் எமது நாட்டின் இன முரண்பாடுகள் மேலும் மேலும் கூர்மை அடைந்து சர்வதேச மட்டத்தில் கரிசனைகளை எழுப்பி அவர்களுக்குப் பெரும் பாதிப்பையும் பாரிய செலவுகளையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.
இந் நாட்டில் இன முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோமானால் அடுத்த தினமே பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாடு மறுமலர்ச்சி அடைந்து பாரிய முன்னேற்றத்தைப் பெறும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் இருக்க முடியாது. ஆகவே “ஏக்கிய இராச்சிய” என்ற சொல்லிற்குப் பதிலாக “எக்சத் ரட்ட” என்ற சொல்லைப் பாவிப்பதே சிறந்தது என்பது எனது கருத்தாகும். என பதிலளித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.