169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ள நிலைகளில் மக்களை திசை திருப்பபே கள்ளுக்கு தடை எனும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தான் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கித்துள் மரம் தவிர்ந்த ஏனைய மரங்களில் இருந்து கள் இறக்க முடியாது என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது எதற்கு என இதுவரையில் தெளிவுபடுத்த வில்லை இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது இதனால் வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
பனை தென்னை அபிவிருத்தி சங்கங்கள் சமாசங்களுக்கு கூட தடை செய்யப்படுவது தொடர்பில் தெளிவு படுத்தலோ முன் அறிவிப்போ கொடுக்கப்படவில்லை.கள் இறக்கும் தொழில் செய்து பலர் தமது வாழ்வாரத்தை பெற்றுக்கொள்கின்றனர்.கித்துள் மரத்திற்கு இல்லாத தடை எதற்காக பனை தென்னைக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறான தடையை கொண்டு வருவது தொடர்பில் மாகாண அமைச்சுடன் கலந்தலோசிக்கவில்லை. ஏன் அவ்வாறு கலந்தலோசிக்கவில்லை.
புதிய அரசியலைம்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ள நிலைகளில் மக்களை திசை திருப்பபே இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என தோன்றுகின்றது.
புகையிலை தடை செய்யப்பட்ட போது அந்த தொழிலை நம்பி வாழ்ந்த பலருக்கு நஷ்டஈடு கொடுக்கவில்லை மாற்று தொழில் வாய்ப்பு எற்படுத்திக்கொடுக்கவில்லை. அதே போலவே தற்போது கள் இறக்க தடை எனும் வர்த்தமானி அறிவிப்பு வெளி வந்துள்ளது.
இந்த தடையினை நாம் முற்று முழுதாக எதிர்க்கின்றோம். இந்த தடையால் பாதிக்கப்படபோகின்ற மக்களுக்குக்காக போராடுவோம். என தெரிவித்தார்.
கொள்கைகளுடன் ஒன்றி போகிறவர்களுடன் கூட்டு சேர தயார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் , கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் கட்சிகளுடன் கூட்டு சேரும் எண்ணம் மக்கள் முன்னணிக்கு உள்ளாதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது , கொள்கை அடிப்படையில் ஒன்றிபோக கூடியவர்களுடன் தான் கூட்டு சேருவோம். தமிழ் தேசிய அரசியலை சரியாக கொண்டு செல்வோம்.
யுத்தகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்து கொண்டு நான், பத்மினி சிதம்பரநாதன் உள்ளடங்கலாக பாராளுமன்றத்தை முடக்கி போராடினோம் அந்த நற்பெயருடன் இன்று சம்பந்தன் உள்ளார். அன்று போராடிய நாம் வீதியில் நிற்கின்றோம்.
இந்தியாவிற்கு தேவையற்றவை நான் பேச மாட்டேன் என சம்பந்தன் சொன்ன பிறகே நாங்கள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினோம்.
இப்போது மீண்டும் நாம் கூட்டு சேர்ந்த பின்னர் எம்முடன் கூட்டு சேர்ந்தவர்கள் பேரம் பேச்சுக்கு விலை போனால் மீண்டும் பிளவு ஏற்படும் அப்போதும் நாமே மோசமானவர்களாக வீதியில் நிற்போம் மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அதனால் கூட்டு சேர்வது தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம். என தெரிவித்தார்.
தனி நாடு கோரவில்லை.
மேலும் ,
கற்றலோனியா மக்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதனால் நாம் தனி நாடு கோரவில்லை.
நாங்கள் தனி நாடு கோரவில்லை சிங்களவர்கள் உள்ளிட்ட வேறு யாரும் எங்களை நசுக்காது, நாம் கௌரவமாக வாழ விரும்புகின்றோம். சுயநிர்ணய உரிமையை கோருகின்றோம் ஒரு நாட்டிற்குள் தமிழர்கள் கௌரவமாக வாழவேண்டும் ஒரு நாட்டிற்குள் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டும்.என்பதனையே கோருகின்றோம். என தெரிவித்தார்.
Spread the love