குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு பேரூந்து சேவைகள் நடைபெறுவதில்லை என பிரதேச செயலாளர்களிடமும் மாவட்டச் செயலாளரிடமும் பொது அமைப்புகளினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாங்குளத்தில் இருந்து மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களுக்கு பேரூந்து சேவைகள் நடாத்தப்பட வேண்டும் என்பது பொது அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பல தடவைகள் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாந்தைகிழக்கில் உள்ள பல கிராம மாணவர்கள் நடந்து செல்வதன் காரணமாக பாடசாலை நேரங்களில்பேரூந்து சேவைகள் இடம் பெறவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை துணுக்காய் நகரத்தில் இருந்து தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், ஆரோக்கியபுரம், அமதிபுரம், ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், கேப்பாப்புலவு ஆகிய கிராமங்களுக்கான பேரூந்து சேவைகள் நடைபெறுவதில்லை.
இதேபோன்று மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும் இடையிலான மாலை 4.00 மணிக்குப் பின்னரான பேரூந்து சேவைகள், முல்லைத்தீவு நகரத்தில் இருந்து பொது மருத்துவமனை ஊடாக குமுழமுனைக்கான பேரூந்து சேவைகள், முல்லைத்தீவு நகரத்தின் உள்ளூர் பேரூந்து சேவைகள், முல்லைத்தீவு நகரத்தில் இருந்து வலைஞர்மடம், மாத்தளன் வரையான பேரூந்து சேவைகள் நடாத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை பேரூந்து சேவைகள் நடைபெறவில்லை.
இதன் காரணமாக பிரதேச செயலகங்கள், முல்லைத்தீவு பொது மருத்துவமனை, மாங்குளம் பிரதேச மருத்துவமனை, மல்லாவி ஆதார மருத்துவமனை என்பவற்றிற்குக கூட நோயாளர்கள் செல்வதில் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்வதில் மாவட்டத்தில் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலைமையினைக் கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கிராமங்களுக்கான பேரூந்து சேவைகளை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.