வடகொரியாவில் அணு ஆயுத சோதனை முயற்சி இடம்பெற்ற போது சுரங்கம் உடைந்து 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு ஒக்டோபரில் வடகொரியா முதல்முறையாக அணு ஆயுத சோதனையை நடத்திய அதனைத் தொடர்ந்து 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை கடந்த செப்டம்பர் 3ம் திகதி மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் வடகொரிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்று நேற்று ஒளிபரப்பிய செய்தியில்
வடகொரியா- சீன எல்லைப்பகுதியில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரிய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றது எனவும் இதற்காக அங்குள்ள மேன்டப் மலைப் பகுதியில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 10ம் திகதி சுரங்கம் உடைந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர் எனவும் அவர்களை மீட்க மேலும் 100 தொழிலாளர்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவர்களும் மண்ணில் புதைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த மலைப் பகுதியில் கதிர் வீச்சு பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பாக அண்டைநாடான சீனாவுக்கு கதிர் வீச்சு அபாயம் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேன்டாப் மலையில் 6 இடங்களில் அணு ஆயுத சோதனை மையங்களை வடகொரியா அமைத்துள்ளது. அங்கு அணு ஆயுத சோதனை நடைபெறும் போதெல்லாம் அந்தப் பகுதியில் சுமார் 6.3 ரிக்டர் அலகில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றதுடன் அடுத்தடுத்து நிலஅதிர்வுகளும் பெருமளவில் நிலச் சரிவுகளுத் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.