குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பகிரங்க கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பல்கலைகழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் மூன்றாவது நாளாக யாழ்.பல்கலைகழக வாயில் கதவினை பூட்டி நிர்வாகத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தம்முடன் கலந்துரையாட எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 2மணிக்கு யாழ்.பல்கலைகழகத்திற்கு வருமாறு கோரி அனைவருக்கும் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.
அக் கலந்துரையாடல் மூலம் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
தடையை மீறியும் போராட்டம் தொடர்கிறது.
அதேவேளை விஞ்ஞான, கலை மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களை சேர்ந்த மாணவர்கள் யாழ்.பல்கலை கழக வாளகத்தினுள் உள்நுழைய நேற்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4மணிக்கு முன்னர் விடுதிகளில் உள்ள மாணவர்கள் வெளியேற வேண்டும் என நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலை கழக துணைவேந்தர் ஆர். விக்னேஸ்வரன் உத்தரவு இட்டு இருந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் வாளகத்தினுள் மாணவர்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்த போதிலும் , மாணவர்கள் தடையை மீறி வளாகத்தினுள் உள்நுழைந்து வாயில் கதவினை பூட்டி போராட்டத்தினை மூன்றாவது நாளாகவும் முன்னெடுத்தனர்.
அத்துடன் இன்றைய தினம் மாலையுடன் மாணவர்களை விடுதியினை விட்டு வெளியேற உத்தரவு இட்டு இருந்த போதிலும் பெரும்பான்மையின மாணவர்கள் மாத்திரமே விடுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஏனைய மாணவர்கள் விடுதிகளையே தங்கியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.