குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது. எவ்வாறெனினும், தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஏழு நிபந்தனைகளை சுதந்திரக் கட்சிக்கு விதித்துள்ளனர்.
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேர்தலில் ஆதரவளிக்கும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 42 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஆவணமொன்றை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுதல், புதிய அரசியல் சாசனம் அமைக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகுதல், பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டோரை தண்டித்தல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினை குறைத்தல் உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளை கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ளது