கட்டலோனியா ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட்டை கைது செய்ய ஸ்பெயின் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவரது பெல்ஜிய சட்டத்தரணி அறிவித்துள்ளார். நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக கட்டலோனிய ஜனாதிபதி மீது ஸ்பெய்ன் மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தி அவரை பணி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா பிரிந்து செல்லும் சுதந்திர பிரகடனம், கட்டலோனியா பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதனையடுத்து கட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தநிலையில் கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் மற்றும் அவரது 13 சகாக்கள் மீது தேசத்துரோகம், கிளர்ச்சி, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றையதினம் முக்கிய பங்காற்றிய எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
ஆனால் நீதிமன்ற விசாரணை, நேர்மையாக நடைபெறும் என வாக்குறுதி வழங்கினால் மட்டுமே தான் ஸ்பெயின் திரும்ப முடியும் எனத் தெரிவித்த கார்லெஸ் பூகிடமண்ட்டும் 4 அமைச்சர்களும்; பெல்ஜியத்திலேயே இன்னும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகமால் பெல்ஜியத்தில் தங்கியுள்ள அவர்களை கைது செய்ய ஸ்பெயின் நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.