ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து சிரியாவில் அவ் அமைப்பின் செயற்பாடுகளில் பங்கெடுப்பதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 5 இளைஞர்களின் புகைப்படம் மற்றும் விபரங்களை இந்தியாவின் கேரள மாநிலத்தின் காவல்துறை வெளியிட்டுள்ளது.
குறித்த அமைப்புக்கு உறுப்பினர்களை இணைத்ததாக கூறப்பட்டு முக்கிய நபர் ஒருவர் உட்பட 5 பேரை கேரள காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது. இதனையடுத்து சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து போர் நடவடிக்கையில் ஈடுபடும் 5 கேரள இளைஞர்களின் விபரங்கள் தெரிய வந்திருப்பதாக கேரளக் காவல்துறை கூறுகிறது,
இதன் பிரகாரம் ஐ.எஸ் அமைப்பிற்கு சேர்த்தவர் என்று கருதப்படும் ஹம்சா (Hamza) என்ற ஹம்சா தாலிபான், (வயது 52) என்பவரை கடந்த வாரம் கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இதன்போது, வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் கேரள இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக கேரளக் காவல்துறை குறிப்பிடுகின்றது.
இதேவேளை 40இற்கும் மேற்பட்ட இளைஞர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சிரியா, ஏமன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போரில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 பேர் இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வந்த வடக்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போயுள்ளனர். இவர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன. தற்போது இவர்களில் 5 பேர் குறித்த தகவல்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.
தேச்சிகுளத்தை சேர்ந்த Abdul Gayoom, பாப்பினசேரியைச் சேர்ந்த Saffan மற்றும் கன்னூர் மாவட்டம் வல்லபட்டிணத்தைச் சேர்ந்த Abdul Manaf, Muhamed Shabeer, Suhail ஆகியோர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து சண்டையிட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேற்கு ஆசிய நாடுகளில் பணிபுரிய சென்ற 100 முதல் 150 கேரள இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்கலாம் என்றும் கேரளா காவல்துறை சந்தேகம் தெரிவிக்கிறது.