குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் தடை செய்யப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். கொழும்பு ஜோசப் கல்லூரியில் நேற்றைய தினம் நடைபெற்ற கத்தோலிக்க ஆசிரியர் தின நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதனை தடை செய்யுமாறு தாம் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதனால் மாணவர்கள் அறநெறி வகுப்புக்களுக்கோ, மத வழிபாட்டுத் தளங்களுக்கோ செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் சிறிய மாணவ மாணவியரும் நீண்ட நேரம் தனியார் வகுப்புக்களுக்கு சென்று வீடு திரும்புவதனை தாம் பர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமது காலத்தில் பாடசாலை முடிந்ததும் நேரடியாக விளையாட்டு மைதானம் செல்வோம் எனவும் தற்போதைய பிள்ளைகள் நேரடியாக தனியார் வகுப்புக்களுக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.