ராமேஸ்வரம்:
தனுஷ்கோடி கடற்கரையோர பகுதிகள் ராணுவ ரடார் மூலம் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்திய, இலங்கை கடல் எல்லையான தனுஷ் கோடியில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்தின் நவீன கருவிகள் அடங்கிய வாகனம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தனுஷ்கோடி மட்டுமின்றி எம்.ஆர்.சத்திரம், அரிச்சல்முனை பகுதிகளிலும் இந்த வாகனம் ரோந்து சென்று வருகிறது. வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள ராடார் கருவி மூலம் கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. உளவுத்துறையினரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக உளவுப்பிரிவு காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டைத் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. அங்கு ராணுவ தளம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை இந்தியா பலப்படுத்த திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதன் எதிரொலியாக தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைத்து திறக்கப்பட்டது. இவையாவும் பாதுகாப்பு காரணங்களின் பின்னணி என கருதப்படுகிறது. இந்த சாலையிலேயே தற்போது நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வாகனத்தில் உள்ள நவீன கருவிகள் மூலம் பிற நாடுகளின் சிக்னல்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை இயக்கப்படுவதற்கான வாய்ப்பு போன்றவை ஆய்வு செய்யப்படலாம். இந்த ஆய்வின் அடிப்படையில் இந்தியா இங்கு ராணுவ தளம் அமைக்கவும் வாய்ப்புள்ளது எனவும் உளவுத்துறை அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.