தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் காட்டூனிஸ்ட் பாலாவுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை பிணை வழங்கி உத்தரவிட்டது.
இன்று காலை, கார்ட்டூனிஸ்ட் பாலாவை நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் அழைத்து சென்ற போது காவல்துறையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கார்டூனிஸ்ட் பாலா கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த ஊடகவியலாளர் திருநெல்வேலி சென்றபோது, திருநெல்வேலி காவற்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழக முதல்வர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மற்றும் திருநெல்வேலி பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் மற்றும் அண்மையில் கந்துவெட்டி கடன் தொல்லையால் இடம்பெற்ற தீக்குளிப்பு தொடர்பான கேலிச் சித்திரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
காட்டூனிஸ்ட் பாலா தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்றில் பணிபுரிவதுடன் சில ஆங்கில ஊடகங்களிலும் கேலிச்சித்திரங்களை வரைந்துள்ளார். 2009இல் இடம்பெற்ற இனப்படுகொலைப் போர் தொடர்பிலும் இந்திய தமிழக அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கை அரசின் போர் நடவடிக்கை தொடர்பிலும் பிரசித்தமான கேலிச் சித்திரங்களை வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.