215
தமிழகத்தை சேர்ந்த மூத்த தமிழறிஞர் மா. நன்னன் சுகவீனம் காரணமாக இன்று சென்னையில் தனது 94ஆவது வயதில் காலமானார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அன்னாரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விருதாச்சலத்தில் உள்ள சாத்துக்குடல் என்ற கிராமத்தில் பிறந்த மா. நன்னன் 1948ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை நன்னன் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார். அத்துடன் தமிழ் வளர்ச்சித்துறையின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
1980களில் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தமிழ் பயிற்றுவித்து புகழ் பெற்ற இவர் 17 ஆண்டுகளாக எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் இவர் நடத்திய தமிழ் பயிற்சி வகுப்புகள் அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் இலக்கியம், தமிழ் கட்டுரைகள் பாடநூல்கள் என 70இற்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ள மா.நன்னன் எழுத்து அறிவித்தலில் நன்னன் முறை என்ற புதிய முறையை உருவாக்கியவர் என்பதும் சிறப்பம்சமாகும்.
தமிழறிஞர் மா. நன்னன் சென்னை மாநில கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Spread the love