போராட்டங்களால் பெற முடியாதவற்றை இணக்க அரசியல் ஊடக ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து பெற முடியும் என நம்புகின்றோம் என இன்றைய தினம் வடமாகாண சபை புதிய உறுப்பினராக பதவியேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அலிக்கான் ஷெரீப் தெரிவித்தார்.
வடமாகாணசபையின் 109வது அமர்வு இன்று யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது முன்னாள் மாகாகண சபை உறுப்பினரான ரிப்கானுக்கு பதிலாக புதிய உறுப்பினராக அலிக்கான் ஷெரீப் பதவியேற்றார்.
பதவியேற்ற பின்னர் தனது முதல் உரையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
சிறுபான்மையினரான நாம் எமது உரிமைகளை பெறுவதற்காக அஹிம்சை வழியில் போராடினோம். ஆயுத வழியில் போராடினோம். அதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் அவயங்களை இழந்து அங்கவீனர்கள் ஆகியுள்ளனர்.
அந்நிலையில் நாம் தற்போது இணக்க அரசியல் ஊடாக ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை கொடுத்து உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
அதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும். தமிழ் முஸ்லீம் மற்றும் மலையாக தமிழ் மக்கள் என நாம் 25 வீதம் சிறுபான்மையினர் உள்ளோம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நாம் அடைய போகும் இலக்கு வெகு தூரத்தில் இல்லை. எங்களை மக்கள் நம்பி வாக்களித்து இங்கே அனுப்பியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இளைக்காது நாம் ஒற்றுமையாக செயற்பட்டு இலக்கை நோக்கி பயணிப்போம் என தெரிவித்தார்.
அதேவேளை புதிய உறுப்பினரான அலிக்கான் ஷெரீப் முதலுரை நிகழ்த்தும் போது , அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சரை தூய தமிழில் கவிதை வடிவில் விளித்து உரையை தொடங்கினார். அதேபோன்று உரையின் போதும் தூய தமிழில் உரை நிகழ்த்தினார். என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் உரையை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் , தங்களின் தமிழை பாராட்டு கின்றேன். அத்துடன் தங்களின் உரையின் ஊடாக பல சாதகமான கருத்துக்கள் வெளிப்பட்டு உள்ளன.
உங்கள் உரையின் ஊடாக தங்களின் கட்சி தலைவரின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளனவோ என என்ன தோன்றுகின்றது. அவ்வாறு மாறுதல் நிகழ்ந்து இருந்தால் மகிழ்ச்சியே என தெரிவித்தார்.