குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அதன் அடிப்படையில் அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு போதாது. சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
‘அரசு தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாராகியுள்ளது. நாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். பிரச்சினைகள் ஏற்பட்டதற்கான காரணங்களுக்குரிய தீர்வையே தர வேண்டும். வெறுமனே அதற்குமேல் தர முடியாது – இதற்கு கீழ் தரமுடியாது எனக் கூறக்கொண்டிருந்தால் பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியாது.
அரசுதான் எமது உரிமைகளைப் பறித்தது. அவற்றைத் திருப்பித் தருவது அதன் கடப்பாடாகும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு எது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான உரிமைகளை வழங்கமுடியும்.
ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் நடந்தாலும் பெரும்பாண்மை மக்களின் அதிகாரம் மேலோங்கி நிற்கும். தருபவற்றை ஏதோ ஒரு காரணத்துக்காக மீளப் பெறுவதற்கு ஒற்றையாட்சி அதிகாரப் பகிர்வு வழிவகுக்கும்’ என தெரிவித்தார்.