குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கி பிரதமர் பினலி யில்டிரிம் ( Binali Yildirim ) ஐ பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. துருக்கி பிரதமரின் புதல்வர்கள் வெளிநாடுகளில் இரகசிய கணக்குகள் பேணியதாகவும் சொத்துக் குவித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து துருக்கியன் பிரதமர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான பரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் பிரதமரின் புதல்வர்கள் மால்டாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சில நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு வெளிநாடுகளில் இரகசியமாக நிறுவனங்களை நடத்திச் சென்றதனால், துருக்கி பாரியளவில் வரி வருமானத்தை இழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
சட்ட ரீதியாக இது குற்றச் செயல் அல்ல என்ற போதிலும் தார்மீக ரீதியில் இவ்வாறு நாட்டுக்கு கிடைக்கக்கூடிய வரியை முடக்கியமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என தெரிவித்துள்ளன. நாட்டுக்கு நிதி தேவையான நேரத்தில் அதற்கான முன்னுதாரணமாக பிரதமர் இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளன. இதேவேளை, தமது புதல்வர்கள் எந்தவிதமான குற்றங்களையும் இழைக்கவில்லை என பிரதமர் பினலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.