தமிழகம் முழுவதும் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனை கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதனை தமிழகம் முழுவதும் இன்று சசிகலா உறவினர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம் என தினகரனின் சட்டத்தரணி காசிநாதபாரதி தெரிவித்துள்ளார்.
ஜெயா டி.வி. அலுவலகம்-சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அ.தி.மு.க. பிளவுபட்டதையடுத்து, சசிகலாவின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு ஜெயா தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது. வருமான வரி சோதனை நடைபெற்று வருவதை ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஈக்காட்டுதாங்கல், வேளச்சோரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மன்னார்குடி மன்னை நகரில் உள்ள தினகரன் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் சோதனை நடத்தப்படுவதாகவும், வருமான வரி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயாவின் போயஸ் கார்டினில் அமைந்துள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் வருமான வரி சோதனை
சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் வீடு, தஞ்சை அருளானந்த நகரில் சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடு, அவர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்த அ.தி.மு.க.வைக் கைப்பற்றும் போட்டியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், டிடிவி தினகரன் தலைமையிலான அணியும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பொலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
தவிரவும்தினகரன், சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், அவர்களின் நிறுவனங்கள், அதில் பணியாற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறுவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த சோதனைகளுக்கு ஜெயா டிவியின் வழக்கறிஞர் காசிநாதபாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வீடு – நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்திலும் வருமான வரி சோதனை…
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிலும் வருமான வரித்துறை சோதனை
வருமான வரி சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம்: தினகரனின் சட்டத்தரணி காசிநாதபாரதி
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தினகரனின் சட்டத்தரணி காசிநாதபாரதி கூறியதாவது:-வருமான வரித்துறை தனது கடமையை செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் எங்களுக்கு கிடையாது. விஷால் மத்திய அரசை விமர்சனம் செய்தவுடன் அவரது நிறுவனத்தில் சோதனை நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகிறவர்களின் நிறுவனங்களில் எல்லாம் வருமான வரி சோதனை நடக்கிறது. இது சட்டத்துக்கு புறம்பானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பிறகு ஓரிரு வாரங்களிலேயே ஜனார்த்தன ரெட்டி என்பவர் 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தனது மகளின் திருமணத்தை நடத்தினார். அங்கே வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை.
சேகர் ரெட்டி வீட்டில் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 கோடி அளவில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டன. அங்கே இவர்கள் நடத்திய சோதனை என்ன?
தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் சோதனை செய்தால் கூட பரவாயில்லை. ஆனால் தலைமை செயலகத்தில் சோதனை செய்தது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து வருமான வரித்துறையை வைத்துக் கொண்டு தங்களது ஏவல் துறையின் மூலமாக தங்களுக்கு எதிராக அரசியல் செய்பவர்களுக்கு எதிராக அச்சுறுத்தலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கு எதிரானது.
இன்று நடைபெறுகிற இந்த சோதனை என்பது, இதற்கு மேலும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டுமானால் சேகர் ரெட்டி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட போது, ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதில் உச்சரிக்கப்பட்டது.
ஆனால் அவரது வீட்டில் இன்று வரை சோதனை நடத்தப்படவில்லை. அவரிடம் இருக்கின்ற பல ஆயிரம் கோடி ரூபாய்க்காக வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. தங்களுக்கு சாமரம் வீசுகின்றவர்கள் வீட்டில் சோதனை நடத்தப்படாது. தங்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள். வீட்டில் மட்டும் சோதனை நடத்துவது என்பது ஒட்டுமொத்தமாக இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்படுகின்ற அறை கூவலாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.
ஜெயா டி.வி. என்பது அ.தி.மு.க.வின் டி.வி. கிடையாது. அ.தி.மு.க. சார்பான டி.வி. அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நடத்தவில்லை. அதே போல் நமது எம்.ஜி.ஆர். என்பது அ.தி.மு.க. சார்பான பத்திரிகை. ஆனால் இந்த ஊடகங்களில் தங்களுக்கு சாமரம் வீசும் வேலையை செய்யவில்லை என்பதற்காக இதுபோல வருமான வரித்துறை சோதனை நடத்துவது சட்ட விரோதமானது. தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் நடந்த சோதனையில் இதுவரை எதை கண்டுபிடித்தார்கள்.
அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வருமான வரித்துறை சுதந்திரமான அமைப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்படி தொடர்ந்து அச்சுறுத்துகின்ற விதத்திலே எங்கள் மீது நடவடிக்கை தொடருவதால் இந்த வருமான வரித்துறை மோடியின் பாடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.
எங்களால் இவர்கள் மீது வழக்கு தொடர முடியும். பல கோடி ரூபாய்க்கு இவர்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர தயாராக இருக்கிறோம். சட்ட ரீதியாக இந்த சோதனையை நாங்கள் எதிர்கொள்வோம்.
ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி அவரை செயல்படாமல் வைத்துள்ளனர். எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத திராணியற்றவர்கள் இது போன்ற சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் புரட்சித் தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள் எங்கள் மனசாட்சியை தவிர எதற்கும், எந்த விஷயத்துக்கும் அஞ்சமாட்டோம்.
நாங்கள் ஓ.பன்னீர் செல்வத்தை போலவோ, எடப்பாடி பழனிசாமியை போலவோ யாரிடமும் அடிபணிவதற்கு தயாராக இல்லை. இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
வருமான வரிசோதனை நடத்தி ஜெயா டி.வி.யையும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழையும் கைப்பற்ற முடியாது. இது வழிப்பறி கொள்ளைக்கு இணையானதாகும். வரி ஏய்ப்பு என்றால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை உடனடியாக ஒரு இடத்தில் சோதனை நடத்தி விட முடியாது. இதற்காக 500 போலீசாரை அழைத்து வந்து எங்களை அச்சுறுத்த முடியாது. 5000 போலீசார் வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்களும் உங்களுக்கு சாமரம் வீசுவோம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத்தான் முடியும். எனத் தெரிவித்துள்ளார்.