இந்தியாவின் ஹைதராபாத் மாநகரத்தின் வீதிகளில் பிச்சை எடுப்பதற்கு இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் நகர வீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவது மற்றும் பொது மக்களுக்கு தொல்லை ஏற்படுவதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஹைதராபாத்தில் எதிர் வரும் 28ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு 8வது உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் மகள் இவான்கா ரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையிலேயே ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நேற்றிரவு இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். அதன் பிரகாரம் இன்று முதல் ஜனவரி 7ஆம் திகதி (2018) வரையிலும் பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இச் சட்டத்தை மீறுவோர் மீது இந்திய தண்டணை சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் மகள் இவான்கா ரம்ப் வருவதனையொட்டி அங்கு பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளமையானது அந்த மக்களின் வாழ்வை கேள்விக்கு உள்ளாக்கும் செயல் எனவும் உண்மையை மூடி மறைக்கும் செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.