Home இலங்கை இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!

இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!

by editortamil
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி. ஜே.வி.பியைப்போல நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்சவும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது. வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ரராஜபக்சவும் வெளிப்படையாக இனவாதத்தை கக்கும் பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்? எந்த உரிமையும் இன்றி, வடக்கு கிழக்கை தெற்குடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதுவே தமக்குள் அடக்கி ஒடுக்கி ஆளும் பேரினவாதப் போக்கல்லவா?

ஒரு நாட்டில் புதிய கிராமங்கள் உருவாகுவது எவ்வளவு இயல்பானதோ, அதேபோல உலகில் புதிய நாடுகள் உருவாகுவது இயல்பானது. அதிலும் காலனிய ஆதிக்கத்தில் கலைக்கப்பட்ட நாடுகள் பலவும் நவீன உலகில் மீட்சி பெற்றிருக்கின்றன. அண்மைய காலத்தில் குர்திஸ்தான், கட்டலோனியா மாகாண மக்களின் முடிவுகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றாக இணைக்கப்பட்ட நாடுகள் பெரும்பாலும் அதிகாரத்தை உரிய வகையினில் பகிராமை காரணமாகவே பிரிந்து செல்லும் தீர்மானத்தை எடுக்கின்றன. பாரபட்சம், அடக்கி ஒடுக்கும் போக்கு, இன அழித்தல் செயற்பாடு போன்றவையே பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் நிலையை ஏற்படுத்துகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட சூழலே இலங்கையின் நிலரவரமும் ஆகும்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் முன்னர் தமிழர்கள் தமக்கான தனி இராட்சியங்களைக் கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு, தமிழர்களின் பூர்வீக தாயகம். இன்று வடக்கு கிழக்கில் உள்ளடக்கப்படாத சில பகுதிகளும் தமிழ் இராட்சியமாகவே இருந்துள்ளன. புத்தளம் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி. யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம்வரை விரிந்த இராட்சியமாக காணப்பட்டுள்ளது. புத்தளத்தில் இன்று அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முன்னேச்சரம் ஆலயம் தமிழர்களின் வரலாற்றுக்கு முக்கியமான சான்றாகும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமையை மறுத்து, அவர்களின் தாயகத்தை அபகரித்து வரும் நிலையிலேயே தமிழ் மக்கள் தம்மை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. அண்மையில் கருத்து தெரிவித்த இராஜங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன ”வரலாற்றின் அடிப்படையில் பார்கின்ற போதும் வடக்கிலும் கிழக்கிலும் வேறுப்பட்ட தனித்தனி இராச்சியங்களாகவே எமது நாடு இருந்தது என்பதை அறியமுடிகின்றது. வெளிநாட்டவரின் வரவின் பின்புதான் ஒருமித்த தேசமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வரலாறுகள் எவையும் இன்று கூறப்படுவதில்லை. போலியான வரலாறுகளே எடுத்துகாட்டப்படுகின்றன.” என்று கூறியிருக்கிறார். இந்த நாடு முழுவதும் சிங்களவர்கள் வாழ்ந்துள்ளனர் என்றும் இது சிங்களவர்களின் நாடு என்றும் கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் சிங்களப் பேரினவாதிகளின் மத்தியில் இவர் உண்மையை பேசியிருப்பது நம்பிக்கையானது.

எனினும் “அதனால் புதிய அரசியலமைப்பிலும் நாம் பூகோள அடிப்படையிலான எந்த மாற்றங்களையும் ஏற்படுத்துவதில்லை என்பதே உண்மையாகும். அதேபோல் கடலின் ஒரு பகுதி நிரப்பப்பட்டாலும் கூட அதனை ஒருபோதும் தனித்த இராச்சியமாக மாற்ற முடியாது. ஜனாதிபதியின் கையெழுத்தினால் மாத்திரமே எமது நாட்டில் ஒரு தனி அலகை உருவாக்க முடியும் என்ற விடயங்களும்கூட புதிய அரசமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும்” என்ற விடயங்களையும் அமைச்சர் கூறியிருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினையை வரலாற்று அடிப்படையில் நோக்க வேண்டும். அந்த அடிப்படையில் அதனை ஆராய்வதன் மூலமே தீர்க்க முடியும்.

அண்மைய காலத்தில் தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் தாயக வாழ்வையும் உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக காய்களை நகர்த்தவே வடக்கு கிழக்கில் வலிந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச போன்ற இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து நின்று தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை புனிதப்படுத்திய பெரும்பான்மையின மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பை தாம் எதிர்க்கின்றனராம்.

இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக வாழ வேண்டும் என்று இவர்கள் நிர்பந்திக்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கில் சிறுபான்மையினராக தாம் வாழ முடியாது என்று கூறி தமிழர்களின் பூர்வீக உரிமைக்கு எதிராக செயற்படுவதே மிகவும் அபாயகரமானதும் மிகவும் அபத்தமானதுமாகும். வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு தீர்மானிக்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக ஒரு நாட்டுக்குள் தனித் தேசமாக தமிழ் மக்கள் வாழ்வதையும் உறுதிப்படுத்துவதும் வடக்கு கிழக்கிற்குள் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுடன் வாழ்வதையும் சட்ட ஆவண ரீதியாக உறுதிப்படுத்துவதுமே இதற்கு உகந்த வழி.

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மெய்யான அக்கறையின்பால் எடுக்கப்படுவதில்லை. சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அரசியல் தீர்வு காண்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றன. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது இதனாலலேயே. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வளவு கசப்பான நிகழ்வுகள் நடந்தேறிய பின்னரும் இப் பிரச்சினையை தீர்க்காமல் பெரும்பான்மையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்களும் நிகழ்வுகளுமே இலங்கைத் தீவில் நடக்கின்றன.

தமிழ் மக்கள்மீது இனப்படுகொலையை நிகழத்தியவர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ச ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்றும் இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் கூறியுள்ளார். ஒரு பல்கலைக்ககழத்தில் பீடாதிபதியாக செயற்படுபவரின் மனமும் போக்கும் இப்படி உள்ளது என்றால் இலங்கையில் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வது? இவர் ஒரு கல்வியாளராகவின்றி, பௌத்த சிங்கள கடும்போக்குவாதியாகவே இருக்கிறார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதியான விமல் வீரவன்சவையும் ஒப்பிட்டு பேசியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சி நாாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார. இவர் விக்கினேஸ்வரனை கடலில் தள்ள வேண்டும் என்று கூறுகிறார். விக்கினேஸ்வரன் தென்னிலங்கையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை. இந்த நாடு முழுவதும் தமிழர்களு்ககு சொந்தம் என்று கூறவில்லை. விமல் வீரவன்ச அண்மையில் இலங்கை நாடாளுமன்றம்மீது குண்டு வீசுவேன் என்றார். தமிழ் மக்கள்மீது நடத்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் தமிழர்கள் தமது மண்ணில் உரிமையுடன் அமைதியாக வாழவேண்டும் என்றும் கூறும் விக்கினேஸ்வரனையும் சிங்கள பாராளுமன்றம்மீது குண்டு வீசுவேன் என்று கூறும் விமல்வீரவன்சவையும் ஒப்பிடும் ஆளும் கட்சி உறுப்பினரது கருத்து மிக மிக பொறுப்பற்ற செயலாகும்.

அண்மையில் வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிந்த குடியேற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மையின மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கும் நிகழ்வை மைத்திரிபால சிறிசேனவும் வெற்றிகரமாக முன்னெடுப்பதுடன் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையையும் பலரதும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அந்த ஆக்கிரமிப்பை சட்டமாக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டபோதும்கூட சுயாட்சிக்கும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் பேரினவாதிகள் எதிர்க்கின்றனர் என்பதே இலங்கையின் யதார்த்த நிலமையை நன்கு தெளிவுபடுத்துகின்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மணோகணேசன் ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.“இந்த நாட்டில் ஒரு பிரிவினருக்கு முழு நாடும் சிங்கள பௌத்தம் மட்டுமே என கூற உரிமை இருக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கை இணைக்க கோரும் உரிமை இருக்கிறது. ஒரு சாராருக்கு ஒற்றையாட்சி என்று கூற உரிமை இருந்தால், அவர்களுக்கு சமஷ்டி எனக்கூறும் உரிமை இருக்கிறது. பௌத்த மதத்துக்கு மட்டுமே பிரதம இடம் வேண்டும் என இங்கே கூறும்போதும், அங்கே அவர்களுக்கு, மதசார்பற்ற நாட்டை கோரும் உரிமை இருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டமூலம் அல்ல. இடைக்கால யோசனை ஆவணம் ஆகும். இதன்மூலம் நாம் ஒரு விவாத அரங்கை ஆரம்பித்துள்ளோம். எல்லாவிதமான யோசனைகளையும் முன்வைக்க எல்லோருக்கும் உரிமை உண்டு.” என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும் “இங்கே யாரும் நாட்டை பிரித்து தனி ஒரு நாட்டை அமைக்க கோர முடியாது. அல்லது தனது அரசியல் இலக்கை அடைய ஆயுத தூக்க முடியாது. அத்தகைய கருத்துகளை வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி எவரும் கூற முடியாது” என்று அமைச்சர் கூறியிருக்கிறார். தனிநாடு குறித்த கோரிக்கை ஏன் எழுந்தது என்றும் வடக்கு கிழக்கு மக்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது குறித்தும் அமைச்சர் தெற்கிற்கு எடுத்துரைப்பதும் அவசியமானது. ஒருபுறம் புதிய அரசியலமைப்பை சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றனர். மறுபுறம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கும் சுயாட்சியை வழங்குவதற்கும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். புதிய அரசியலமைப்பில் இவை உள்ளடக்கப்படவில்லை என்று இன்றைய ஆட்சியாளர்கள் சத்தியம் செய்த பின்னரும் எதிர்க்கின்றனர்.

ஆக, எதனையுமே தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கம். மைத்திரிசிறிசேன அரசால் கொண்டுவரப்படும் இந்த யாப்பை அவரது அணியை சேர்ந்தவர்களே எதிர்ப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார். கடந்த காலத்தில் சில தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் இனவாதிகளால் அவை கிழித் தெறியப்பட்டன போன்றே தற்போதைய முயற்சிகள் அமையுமா? என்றும் சந்தேகம் ஏற்படுகின்றது. இதைவிட இன்னொரு சந்தேகம் உள்ளது. அதாவது தமிழர்களின் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்குமா என்பதே அது. புதிய அரசியலமைப்பில் கூறப்பட்ட ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றை ஆட்சியே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஏக்கிய இராட்சிய என்ற பெயரில் ஒற்றை ஆட்சியை இலங்கை அரசு பலப்படுத்தப் பார்க்கின்றது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்போ போதிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்குத் தரும் என்றும் அதனையே தாம் கோருவதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். அரசு தம்மால் வழங்கக் கூடியதை கூறுவதாகவும் தாம் பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான காரணங்களுக்குரிய தீர்வை தரவேண்டும். அதற்கு மேல் தர முடியாது. இதற்கு கீழ் தர முடியாது என்றால் பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் உரிமை அங்கீகரிக்கப்படுவதையும், அப் புதிய அரசியலமைப்பை எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதையும் எதிர்ப்பவர்கள் இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்ல வருகின்றனர்.

இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனக் கூறும்வரையில் இத் தீவில் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்கள், தம்மை தாமே தமது தாயகத்தில் ஆட்சி செய்த வரலாற்று நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட, ஈழம் முழுவதும் பல்வேறு தொல்லியல் சான்றாதாரங்களை கொண்ட, ஈழத் தமிழ் மக்கள், தனிநாடு கோருவது தவிர்க்க முடியாத வழியும் இத் தீவின் இனப்பிரச்சினைக்கும் தீர்வுமாகும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More