குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் 250க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாணத்தில் சமூக விரோத செயல்கள் , போதைப்பொருள் கடத்தல்கள் , போன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை முதல் வடமாகாண பிரதி ; காவல்துறைமா அதிபரின் தலைமையில் வடமாகாணம் முழுவதும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண காவல்துறைப்பிரிவு , காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவு , கிளிநொச்சி , வவுனியா , முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய காவல்துறைப் பிரிவை சேர்ந்த 2 ஆயிரம் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில் 70க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் , மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அந்த அந்த பகுதி நீதிமன்றங்களில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து உள்ளனர். அதேவேளை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 220 பேருக்கு போக்குவரத்து காவல்துறையினர் தண்டம் விதித்துள்ளனர்.
அத்துடன் வடமாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிகையின் போது , 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரிடம் சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.