Home உலகம் “மிகவும் குளிரான நேரத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டிருந்தோம்” “உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது”

“மிகவும் குளிரான நேரத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டிருந்தோம்” “உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது”

by admin

தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் –

ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் அசாத் ஆட்சிக்கு எதிரா போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர்

ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் பஷர் அல்-அசாத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டிப் புதிய குற்றவியல் முறைப்பாடுகளை கடந்த புதனன்று பதிவுசெய்துள்ளனர்.

ஜேர்மனில் வாழும் சிரிய நாட்டு ஏதிலிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 13 பேர் “அசாத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு மிகவும் பொறுப்பானவர்கள்” என்று அவர்கள் கருதும்  17 சந்தேக நபர்களின் பெயர்களை அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம் (ECCHR) என்ற இலாப நோக்கற்ற சட்ட அமைப்பிற்கு கூறினர்.

பாதிக்கப்பட்டவர்களோ அல்லது குற்றவாளிகளோ ஜேர்மனின் குடியுரிமை பெற்றவர்களாக இல்லாதவிடத்தும், அவர்கள் குறித்த வழக்குகளை ஜேர்மன் நீதிமன்றங்கள் கையாள முடியும் என கூறும் உலகளாவிய சட்ட அதிகார எல்லை என்ற விடயத்தின் கீழ் இந்த சருவதேச கைது உத்தரவுகளை நாடுகின்ற புகார் பதிவு செய்யப்பட்டது.

“என்னைப் பொறுத்தளவில், ஜேர்மனில் பதிவு செய்த இந்தக் குற்றப்புகாரானது தற்போது நீதிக்காகப் போராடும் ஒரே வழி” என்று “அல் மஸா” விமானப்படை புலனாய்வுப் பிரிவினரால் மாதக் கணக்காக சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் முப்பது வயதான ஜாசன் அவட் என்ற பெயருடைய வழக்குத் தொடுநர்களில் ஒருவர் கூறினார்.

“இது என்னைப் பற்றி மட்டுமல்ல, அசாத்தின் சித்திரவதை சிறைச்சாலைகளில் இன்னும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லோரையும் பற்றியது” என அவர் மேலும் கூறினார்.

கற்பனை செய்ய முடியாத சித்திரவதை

தானும் தனது மூன்று நண்பர்களும் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட போது அங்கு அவர்கள் முற்தடிகள், ஆணி ஏற்றப்பட்ட தடிகள் மற்றும் கேபிள்களால் தாக்கப்பட்டதாகவும் அதில் தனது தாடை உடைந்தது எனவும் அவட் என்பவர் கூறினார்.

“இப்போதும் அவர்களது குரல்கள், அவர்களது அலறல்களை நான் கேட்க முடிகிறது,” என அவர் தனது சக கைதிகள் பற்றி AFP யிடம் நடுங்கிய குரலில் கூறினார்.  அவர்களின் உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது எனஅவர்மேலும்கூறினார்.

“எங்களுக்கு இப்போது நீதி தேவை,” என்றார் அவாட். “தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லோரையும் விடுவிக்க வேண்டுமென்பது எனது கனவு” என அவர் மேலும் கூறினார்.

ஷெப்பல் இப்ராஹிம் (40), சயிட்நயா இராணுவ சிறைச்சாலையில் ஒன்றரை வருட காலமாக தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக்  கூறிய அவர், “ஜேர்மன் அதிகாரிகள் பொறுப்பானவர்களை கைது செய்ய உத்தரவுகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது மூன்று நான்கு மணித்தியாளங்களாகத் தொடர்ச்சியாக இடைவிடாது தாக்கப்பட்டதாகவும் அப்போது மின் அதிர்ச்சியால் துன்புறுத்தப்பட்டதாகவும் சிரியாவைச் சேர்ந்த குர்து இனத்தவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையானவருமான ஒருவர் சரளமான ஜேர்மன் டொச் மொழியில் AFP க்கு கூறினார்.

“மிகவும் குளிரான நேரத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டிருந்தோம், நாங்கள் சாப்பிட எதுவும் இருக்கவில்லை, சில நேரங்களில் நாங்கள் மூன்று நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தோம், நாங்கள் கண்கட்டப்பட்டிருந்தோம்” என்று இப்ராஹிம் கூறினார்.

டமாஸ்கஸுக்கு அருகில் உள்ள சிறை “கற்பனை செய்ய முடியாத சித்திரவதை, திட்டமிட்ட சீரழிவு மற்றும் பாரிய கொலைகள்” என்பனவற்றிற்கான அடையாளச் சொல்லாக (ஒத்த சொல்லாக) உருவாகி இருந்தது என்று சிரியன் சட்டவாளர்களான அன்வர் அல்-புன்னி மற்றும் மசேன் டார்விஷ் ஆகியோருடன் இந்த வழக்கில் இணைந்து செயற்படும் ECCHR கூறுகிறது.

சிறைச்சாலையில் ஐந்தாண்டுகளில் 13,000 கைதிகளை அசாத் ஆட்சி தூக்கிலிட்டுக் கொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் குழுவான Amnesty International குற்றம் சாட்டியுள்ளது.

கைது உத்தரவு

ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு சட்டவாளர்கள் ஏற்கனவே அசாத் ஆட்சியின் கீழ் 2011 ல் இருந்து இழைக்கப்படும் சித்திரவதைகள் குறித்து நோக்கி வருகின்றனர்.

ஒரு முன்னாள் இராணுவ பொலிஸ் புகைப்படக்காரர் என்கிற “சீசர்” எனும் குறியீட்டுப் பெயரில் உள்ளவர் தான் கையாண்ட பத்தாயிரக் கணக்கான நிழற்படங்களான 11000 இறந்த கைதிகளை காட்டும் படங்களை ஜேர்மனில் உள்ளவர்கள் அடங்கலான விசாரணையாளர்களிடம் கையளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ஜேர்மனியில், இதே ஆதரவுடன் சிரியாவில் சித்திரவதையில் தப்பிப்பிழைத்த 7 பேர் சிரியாவின் இரகசிய சேவை அதிகாரிகள் ஆறு பேரிற்கு எதிராக சருவதேச கைது உத்தரவுகள் கோரிமுறைப்பாடு தாக்கல் செய்தனர்.

சாட்சிகளின் சாட்சியப் படி, கைதிகள் குழாய்கள், தடிகள், சங்கிலிகள், இறைச்சிக் கொலுக்கிகள் போன்றவற்றால் தாக்கப்பட்டும் மின்னதிர்ச்சியின் மூலம் துன்புறுத்தப்பட்டும் வேதியங்கள் மூலம் எரி காயத்திற்குட்படுத்தப்பட்டும் உள்ளார்கள்.

1973-90 காலப்பகுதியில் சிலியின் சர்வாதிகாரி ஒகஸ்டோ பினோசட் வழக்கை மேற்கோளிட்டு, சட்டபூர்வ புகார்கள் ஆண்டுகளாயினும் விளைவுகளைத் தரும் என்று ECCHR இன் வொல்ப்காங் கலேக் கூறினார்.

பினோசட் லண்டனில் 1998 ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல்களுக்காக சருவதேச கைது உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார், இருந்தும்  அவர் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் சிலிக்குத் திரும்பினார்.

Courtesy: The New Arab – தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் –

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More