இந்தியாவின் சென்னைப் பகுதியில் அலுவலக பணிகளுக்கு செல்லும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் 2-வது ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 6 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. இந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் வாழும் நாடுகளில் 2-வது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. இன்று சர்வதேச ‘நீரிழிவு நோய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னையில் நீரிழிவு நோயாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நீரிழிவு நோயை கண்டறிய ‘எச்பி.ஏ.சி’ என்ற பரிசோதனை முலம் 3 மாதகாலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கண்டறிய முடியும்.
மன அழுத்தம் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 2-வது ரக நீரிழிவு நோய்க்கு மன அழுத்தமே காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதனாலேயே அலுவலகங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நீரிழிவினால் கண் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் கண் விழித்திரையை அழித்து பார்வையை பறிக்கிறது. இந்தியாவில் இத்தகைய நோயினால் 21.7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயை தொடக்க காலத்திலேயே கண்டுபிடித்தால் கண்பார்வை பறிபோவதை தடுக்க முடியும். உயர் ரத்தஅழுத்தம், அதிக உடல் எடை, சிகரெட் பிடிப்பது, ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களும் நீரிழிவினால் ஏற்படுகிறது. எனவே உடல் பரிசோதனை அவசியம் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் ‘டயாபடீஸ்’ என்ற நீரிழிவு நோயினால் பலகோடி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை நீரிழிவு நோய் மிகப்பெரிய உடல்நல பிரச்சனையாக உள்ளதாக கூறப்படுகிறது.