குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.உள்ள நொதேர்ன் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட கிருமி தொற்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பரீட், வைத்தியர் மங்களா கமகே, மற்றும் வைத்தியர் குமுது கருணாரத்ன ஆகியோரை உள்ளடக்கியே இக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குறித்த விசாரணைக்குழுவினர் அடுத்த வாரம், யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை, குறித்த வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில்.உள்ள நொதேர்ன் தனியார் வைத்திய சாலையில் அண்மையில் கண் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொண்ட 09 பேரின் கண்களில் கிருமி தொற்று ஏற்பட்டமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 05 மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு கண் வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் கண் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரது கண் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.