குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழில் இரண்டு மணி நேரத்தினுள் நான்கு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி, மற்றும் மானிப்பாய் பகுதிகளிலையே குறித்த வாள் வெட்டு சம்பவங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றன.
மானிப்பாய் சங்குவேலி பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் மீது வாள் வெட்டுகுழு தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பித்து சாரதி வீடொன்றினுள் அடைக்கலம் புகுந்த வேளை வீட்டினுள் உட்புகுந்த தாக்குதலாளிகள் வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில், முச்சக்கர வண்டி சாரதியான மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது – 35), இராசதுரை ரவிசங்கர் ( வயது -40), ரவிசங்கர் பகீரதன் ( வயது -15) மற்றும் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேவேளை ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த 04 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசாம் புரிந்துள்ளனர்.
அந்த தாக்குதல் சம்பவத்தில், ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியை சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் (வயது 35) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதேவேளை கோண்டாவில் டிப்போக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றினுள் உட்புகுந்த கும்பல் உணவகத்தில் உணவருந்திக்கொண்டு இருந்தவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தி விட்டு உணவகத்தில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்தனர். அத்துடன் கடையில் வேலை செய்யும் புத்தூர் கிழக்கை சேர்ந்த செல்வராசா மணிமாறன் (வயது 27) என்பவரை வாளினால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது.
இதேவேளை கடை உரிமையாளரான சுண்டுக்குளி ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த அருளானந்தம் சுஜீவன் (வயது 35) என்பவரை கடந்த சனிக்கிழமை அவரது வீட்டினுள் உட்புகுந்த வாள் வெட்டுகும்பல் தாக்கியிருந்தது.அதில் அவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் அவரது முச்சக்கர வண்டியையும் தாக்குதலாளிகள் கொள்ளையிட்டு சென்றனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை குறித்த முச்சக்கர வண்டி நல்லூர் பகுதியில் குடைசாய்ந்த நிலையில் மீட்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நேற்றிரவு
நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியது. அத்துடன் வீட்டிலிருந்த ராஜன் ( வெள்ளை), மற்றும் லக்ஸ்மன் ஆகிய இருவரை வெட்டிக்காயப்படுத்திய கும்பல், வீட்டுக்கு முன்பாக நின்ற மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றது.
யாழில் கடந்த நான்கு நாட்களில் 8 வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. கடந்த சனிக்கிழமை ஈச்சமோட்டை பகுதியிலும் , ஞாயிற்றுக்கிழமை குருநகர் பகுதியிலும் திங்கட்கிழமை மானிப்பாய் மற்றும் கோப்பாய் பகுதிகளிலும் , செவ்வாய்க்கிழமை இரவு மானிப்பாய் , ஆறுகால்மடம் , கோண்டாவில் மற்றும் முடமாவடி ஆகிய பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் , கோப்பாய் மற்றும் மானிப்பாய் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.