159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
காசோலை கொடுத்து மோசடி செய்தவர் பணத்தினை மீள கொடுக்க வேண்டும் என யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டரீதியற்றது எனவும் மோசடியில் ஈடுப்பட்ட நபருக்கு 2ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
சுதுமலை பகுதியில் திரையரங்கம் அமைப்பதற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து தருமாறு மக்கள் வங்கி கிளையொன்றில் பணிபுரியும் நபரிடம் ஒருவர் 47 இலட்சத்து 85ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்கி இருந்தார்.
நீண்ட காலமாகியும் பணத்தினை பெற்றுக்கொண்ட நபர் திரையரங்கு அமைப்பதற்கு உரிய பொருட்களை கொள்வனவு செய்து கொடுக்காது ஏமாற்றி வந்துள்ளார். அத்துடன் பணத்தினையும் மீள கையளிக்க மறுத்து வந்துள்ளார்.
அதன் பின்னர் தான் வாங்கிக்கொண்ட பணத்திற்காக பதிலாக ஐந்து காசோலைகளை வழங்கியுள்ளார். குறித்த காசோலைகளை வங்கியில் வைப்பில் இட்ட போது அவை திரும்பி விட்டதாக கூறி பணத்தினை கொடுத்து ஏமார்ந்தவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட போலீசார் அது தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
நீதவான் நீதிமன்ற தீர்ப்பு.
யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரனையின் போது எதிராளியாக குறிப்பிடப்பட்ட நபர் குற்றவாளி என கண்ட நீதிமன்று முறைப்பாட்டாளருக்கு, எதிராளி 47 இலட்சத்து 85 ரூபாயினை மீள செலுத்த வேண்டும் எனவும் தவறின் இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு.
குறித்த தீர்ப்புக்கு எதிராக குற்றவாளி மேல் முறையீடு செய்தார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பினை வழக்கி இருந்தார்.
வட்டிக்கு பணம் கொடுப்பது சட்டவிரோதம்.
அதன் போது நீதிபதி தீர்ப்பளிக்கையில் ,
கடன் வழங்கும் வட்டிக் கடை, அடைவு கடை என்பன பதிவு செய்யப்பட வேண்டும். கடன் வழங்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படவில்லையாயின் அவற்றின் செயற்பாடுகள் சட்ட முரணானவை.
வட்டிக்கு கடனை கொடுத்துவிட்டு காசோலையை வாங்கி வைப்பதும், அந்த காசோலையில் பணம் இல்லையென காசோலை திரும்புவதும், நாளாந்த நீதிமன்ற வழக்குகளாகும்.
நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பணத்தினை மீள பெற முடியாது.
நீதிவான் நீதிமன்ற வழக்குகள் குற்ற எண்ணம் குற்றச் செயல் என்பன எண்பிக்கப்பட வேண்டும். வங்கியில் காசு இல்லாத ஒருவர் காசோலை வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும்.
இருப்பினும் பாதுகாப்புக்கு காசோலை பெறுபவர் மோசடியாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பணத்தை மீளப்பெற முடியாது.
அவர் சிவில் நீதிமன்றை நாட வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கில் எதிரி ஒரு மக்கள் வங்கி உத்தியோகத்தர் ஆவர். அவரது வாதத்தின் பிரகாரம், முறைப்பாட்டாளருக்கும் தனக்கும் எதுவித காசோலை கொடுக்கல் வாங்கல் இல்லை எனவும் இன்னுமொரு மக்கள் வங்கி உத்தியோகஸ்தருக்கும் தனக்கும் தான் காசோலை கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வங்கி உத்தியோகஸ்தர்கள் இடையில் கொடுக்கல் வாங்கல்.
மேலும் தான் அந்த உத்தியோகஸ்தருக்கு ஒரு இலட்சத்துக்கு ஒரு நளைக்கு ஆயிரம் ரூபா வீதம் பணம் வாங்கியதாகவும் அதற்காக அவருக்கு 20 காசோலைகள் கொடுத்ததாகவும், இந்த வழக்கில் 5 காசோலைகள் எனவும் ஏனைய காசோலைகள் மூன்று வழக்குகளாக வேறு நபர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கும் முறைப்பாட்டளருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் தான் சக உத்தியோகச்தருக்கு பெருந்தொகையான பணத்தை செலுத்தியதாகவும், அவர் காசோலையை வைத்து முறைப்பாட்டாளாரிடம் கொடுத்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கும் சக உத்தியோகச்தருக்கும் இடையில் காசோலை சிவில் வழக்கு தாக்கல் செய்ததாகவும் அதன் ஆவணங்களை அனைத்துள்ளார்.
வங்கி உத்தியோகஸ்தர்கள் இடையில் கோடிக்கணக்கில் பணம் ?
குறித்த வங்கி ஒரு அரச வங்கியாகும். அங்கு வேலை செய்யும் இரண்டு உத்தியோகத்தர்கள் கோடிக்கணக்கில் காசோலை பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். ஒரு அரச வங்கி உத்தியோகத்தருக்கு கோடிக்கணக்கில் பணம் எப்படி புரளும்? இதில் வங்கிப் பணம் மோசடியாக பாவிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
வங்கி பிராந்திய முகாமையாளர் கவனத்தில் எடுக்க வேண்டும்.
எனவே இது தொடர்பாக வங்கி முகாமையாளர்கள் வங்கி பிராந்திய முகாமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது சட்ட ரீதியான கடமையாகும். அத்துடன் வங்கி உத்தியோகத்தர் கடமைப் பொறுப்புக்கு வெளியே வியாபாரம், மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி செய்ய முடியாது. மீற்றர் வட்டி பிரமிட் வட்டி போன்ற சட்டமுரணான செயற்பாடுகளுடாக தற்கொலைக்கு துண்டுவது குற்றச் செயலாகும்.
பணத்தினை மீள செலுத்த தீர்ப்பளித்தமை சட்ட ரீதியற்றது.
இதனடிப்படையில் இந்த வழக்கில் முறைப்பாட்டாளருக்கு 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா செலுத்துமாறு எதிரிக்கு நீதிவான் நீதிமன்றம் இட்ட தீர்ப்பானது சட்டரீதியானதல்ல என இந்ந மன்று தீர்ப்பளிக்கின்றது.
சிறைத்தண்டனையை மேல் நீதிமன்றம் உறுதி செய்தது
ஆனால் குறித்த எதிரியான மக்கள் வங்கி உத்தியோகத்தருக்கு இரண்டான்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்பளிப்பதாகவும், இத் தண்டனை காலமானது நீதிவான் நீதிமன்ற தீர்ப்பு திகதியில் இருந்து அமுலுக்கு வருவதாகவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
Spread the love