இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்பவர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டுள்ளார். மேலும் அவர் தான் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கென கொடி ஒன்றையும் உருவாக்கி உள்ளார். சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் இருக்கும் இந்த நிலப்பகுதியை இதுவரை எந்த நாடும் உரிமை கொண்டாடாத நிலையில் அவர் இந்த நாட்டுக்கு தன்னை ராஜாவாக அறிவித்துள்ளதுடன் நிறைய எதிர்கால திட்டங்களையும் வைத்துள்ளார்.
தன்னுடைய கனவுகள் குறித்து தெரிவித்த அவர் எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் ‘பிர் தாவில்’ என்ற பகுதி இருக்கிறது எனவும் இந்த பகுதி உலகின் எந்த நாடுகளின் வரைபடத்தில் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பகுதியை இதுவரை எந்த நாடும் உரிமை கோரியதும் இல்லை எனத் தெரிவித்த சுயாஷ் ; உலகிலேயே இந்த பகுதி மட்டுமே மனிதர்கள் வாழ தகுதி படைத்த, யாராலும் உரிமை கோரப்படாத நாடாக இருந்து வந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த நாட்டில் தனக்கு என்று கொஞ்சம் நிலத்தை ஒதுக்கி உள்ள அவர் சூடானுக்கு அருகில் இருக்கும் இந்த பகுதிக்கு செல்வது மிகவும் கடினம் எனவும் சூடானின் ராணுவமும், அங்கு இருக்கும் தீவிரவாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கண்டதும் சுட வாய்ப்பு இருக்கிறதெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுயாஷ் தீட்சித் மிகவும் கஷ்டப்பட்டு சூடான் ராணுவத்திடம் அனுமதி வாங்கி அங்கு சென்று தன்னுடைய நாட்டின் கொடியை அங்கு நட்டுள்ளதுடன் அங்கு விதை ஒன்றை போட்டு தண்ணீரும் விட்டுள்ளதுடன் இந்த புதிய நாட்டிற்கு அவர் ‘த கிங்டம் ஒப் சுயாஷ் தீட்சித் ‘ என பெயரிட்டு இருக்கிறார்.
இந்த நாட்டிற்கு யாரும் குடிமகனாக வரலாம் எனவும் அதற்கு தன்னிடம் ம் அனுமதி பெற்று குடிமகனுக்கான உரிமையை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அங்கு நிலம் வாங்கியவர்கள் உடனடியாக அங்கு செடி நட்டு தண்ணீர் விட வேண்டும் என்பது அவர் வைத்திருக்கும் சட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சுயாஷ் அந்த வேலையை விட்டுவிட்டு சுயமாக நிறுவனம் ஒன்றை இயக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.