குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் சந்தேக நபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டவில்லை.
யாழ்.அரியாலை கிழக்கு பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 24) எனும் இளைஞன் கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்து இருந்தார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள காவல்துறை விசேட அதிரடி படை முகாமில் கடமையாற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை உதவி பொலிஸ் பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிஷாந்த மற்றும் கான்ஸ்டபிள் ரத்னாயக்க முதியன்சலாகே இந்திக்க புஷ்ப குமார ஆகிய இருவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதனை அடுத்து மூடிய மன்றில் அடையாள அணிவகுப்பு நாடத்தப்பட்டது. அதன் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற பிரதான சாட்சியமான நிஷாந்தன் எனும் இளைஞன் அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை.
அதனை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இறந்தவரின் உடலில் இருந்த இரத்த கறைகள் இரசாயான பகுப்பாய்வு அனுப்பி வைத்து உள்ளதாக காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.
அதனை அடுத்து சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பி.மோகனதாஸ் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.
குறித்த பிணை விண்ணப்பத்தினை நிரகாரித்த நீதிவான் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார். அத்துடன் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.