இந்து தீவிரவாதம் குறித்த கருத்திற்காக பிரபல நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விவகாரம் தொடர்பில் தமிழகத்தின் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஒருவாரத்தில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில் இந்தியாவில் இனியும் இந்து தீவிரவாதம் இல்லை என்று மறுக்க முடியாது என தனது கருத்தை பதிவிட்டு இருந்தார்.
இதனையடுத்து அவர் இந்து அமைப்புக்களும் ஆளும் இந்திய மத்திய அரசின் தமிழக அரசியல்வாதிகளும் அவரை சாடி கருத்து வெளியிட்டனர்.
இந்த நிலையில் கமலஹாசனின் கருத்து, இந்து மத மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், எனவே அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மனு, நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நடிகர் கமல் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில், மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க, ஒருவாரம் காலம் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.