குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல டென்னிஸ் வீரர் ரபால் நடாலுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தியவரை நட்டஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரிஸ் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. பிரான்ஸின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஸ்லீன் பேகலாட் ( Roselyne Bachelot ) ற்கே இவ்வாறு நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலியான அடிப்படையில் நடால் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பிரான்ஸின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையில், நடாலுக்கு சுமார் 12000 யூரோக்களை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி நடால், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தார். தமக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தியதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 100000 யூரோ நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென நடால் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.