218
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு ஒரு இலட்சத்து 500 ரூபாய் யாழ்.நீதிவான் நீதிமன்றம் தண்ட பணம் விதித்துள்ளது.
யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிசாரினால், மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் எனும் குற்ற சாட்டில் வாகன சாரதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். சதிஸ்தரன் ஒரு இலட்சத்து 500 ரூபாய் தண்டம் விதித்தார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்திய எட்டு வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் எட்டு சாரதிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதனை அடுத்து எட்டு சாரதிகளுக்கும் தலா 7ஆயிரத்து 500 ரூபாய் தண்ட பணம் விதித்தும் , ஓராண்டுக்கு வாகன சாரதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்து நீதிவான் உத்தரவிட்டார். அதில் நான்கு சாரதிகள் 50 மணித்தியாலங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
வாகன சாரதி அனுமதி பத்திரமின்றி மது போதையில் வாகனம் செலுத்தியமை.
வாகன சாரதி அனுமதி பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு எதிராக தாக்கல் செய்யபப்ட்ட வழக்கில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிவான் 13 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிட்டும் 100 மணித்தியாலங்கள் சமூக சேவை செய்யவும் நீதிவான் உத்தரவிட்டார்.
ஆவணங்கள் இன்றி முச்சக்கர வண்டி செலுத்தியமை.
முச்சக்கர வண்டிக்கு வரி பத்திரம் , காப்புறுதி பத்திரம் , சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை , ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொலிசாரின் சமிக்சைக்கு வாகனத்தை நிறுத்தாது வாகனத்தை தொடர்ந்து செலுத்தியமை ஆகிய குற்ற சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் முதலிரண்டு குற்ற சாட்டுக்களை மறுத்து குறித்த முச்சக்கர வண்டி தனது அப்பாவினது என்றும் , அதற்கும் காப்புறுதி மற்றும் வரி பத்திரங்கள் உள்ளன எனவும் மன்றில் அவற்றை குற்றம் சாட்டப்பட்ட நபர் சமர்ப்பித்தார். ஏனைய மூன்று குற்ற சாட்டுக்களையும் ஏற்பதாக தெரிவித்தார்.
அதனை அடுத்து முதலிரண்டு குற்ற சாட்டுக்களில் இருந்து குறித்த நபரை விடுவித்த நீதிவான் ஏனைய மூன்று குற்ற சட்டுக்களுக்கும் 13 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.
வாகன காப்புறுதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை.
வாகன காப்புறுதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கபப்ட்டது.
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை.
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தினார் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து குறித்த நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
பாதசாரி கடவையில் வாகனத்தை நிறுத்தியமை.
பாதசாரி கடவையில் வாகனத்தை நிறுத்தினார் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து குறித்த சாரதிக்கு 3 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
வாகன ஆசன பட்டி அணியமை.
வாகன ஆசன பட்டியை சாரதி அணியவில்லை என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சாரதிக்கு ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
Spread the love