கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் நேற்றையதினம் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டணம், சிகிச்சை குறைபாடு உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டுவர மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்
இதனை மனித உரிமை ஆர்வலர்களும், தலித் அமைப்பினரும் வரவேற்றுள்ள நிலையில் இந்திய மருத்துவச் சங்கம், கர்நாடக தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசை கண்டித்து கடந்த 3ம் திகதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தியிருந்தன். இந்தநிலையில் கடந்த 13-ம் திகதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியயதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் , கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முழு அடைப்பினால் நேற்று மாநிலம் முழுவதும் 24 நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததுள்ளனர் எனவும் மருத்துவர்களின் போராட்டத்தால் இதுவரை மொத்தம் 29 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது