குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.இயங்கும் ஆவா குழுவின் முக்கிய சந்தேகநபரான நிஷா விக்டர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் இருந்து தப்பியோடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். யாழில்.இயங்கும் ஆவா குழுவின் முக்கிய நபராக காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ள நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ். நிஷாந்தன் (வயது 22) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் அழைத்து வரப்பட்ட போது , தப்பியோடி இருந்தார்.
சிறைச்சாலை வாகனத்தில் இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு வாகனத்தில் இருந்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் நீதிமன்ற கட்டடத்திற்குள் அழைத்து சென்று கொண்டிருந்தவேளை உத்தியோகஸ்தர்களிடம் இருந்து தப்பி , நீதிமன்ற மதில் பாய்ந்து நீதிமன்று வளாகத்திற்கு வெளியில் தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் நின்ற நபர் ஒருவருடன் தப்பியோடி யுள்ளார்.
தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் தீவிரமாக செயற்பட்டனர். அதனை அடுத்து மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் மறைந்திருந்த நிலையில் நிஷா விக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார்.
அதேவேளை நிஷா விக்டர் தப்பி செல்ல உதவிய நபர் மற்றும் தப்பி வந்த விளக்கமறியல் கைதிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பில் காவல்துறையினத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த நிஷா விக்டர் எனும் நபர் கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்களை வாளினால் வெட்டி காயப்படுத்தினார் எனும் குற்ற சாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி கொழும்பில் மறைந்திருந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரினால்; கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரை வெட்டி காயப்படுத்தினார்கள் எனும் குற்றசாட்டில் கடந்த மூன்று மாத காலமாக யாழ்,நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றினால் நிஷா விக்டர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இருந்த போதிலும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நிஷா விக்டருக்கு எதிராக உள்ள வழக்கில் குறித்த நீதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நிலையிலையே மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெறவிருந்த வழக்குக்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட போதிலே நிஷா விக்டர் தப்பி செல்ல முயன்ற நிலையில் மீண்டும் கைது செய்யபப்ட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.