குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரவு-செலவு திட்டத்தில் மதுபானங்களில் ஒன்றான பியர் விலைக்குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அதை உடனடியாக மீண்டும் அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மதுசாரயத்துக்கு எதிரான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது. போதையற்ற நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்துவருகின்ற நிலையில் போதைப்பானமான பியரின் விலையை அரசு குறைத்திருப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்த கவனயீர்ப்பை மேற்கொள்பவர்கள் வலியுறுத்தினர்
மேலும் யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் போதைப்பொருள் பாவனையே காரணமாக உள்ளது. இந்தநிலையில் இந்த விலைக்குறைப்பானது குற்றச்சம்பவங்களை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது
எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு பியருக்கான விலையை மீண்டும் அதிகரித்து அவர் வழங்கிய போதையற்ற நாடு எனும் வாக்குறுதியை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.