குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவன்ட் கார்ட் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவன்ட் கார்ட் வழக்கின் பிரதிவாதிகளை குற்றமற்றவர்கள் எனத் தீர்மானித்து விடுதலை செய்யுமாறு கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் கோரியிருந்தார். கோதபாய ராஜபக்ஸவின் சார்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியின்றி வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கோதபாய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். எனவே இந்த வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலேயே இவ்வாறு கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.