குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் இலங்கையில் நடத்தப்பட்ட பல கட்ட போட்டிகளிலும் தெரிவாகி, தற்போது சர்வதேச அளவில் இடம்பெறவுள்ள போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். சர்வதேச அளவிலான குறித்த போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாணவனது வெற்றி குறித்த பெருமிதம் வெளியிட்டுள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம், குறித்த மாணவனால் பாடசாலை பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட மாணவன் தெய்வேந்திரம் திருக்குமார், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.