அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார். புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.
தன்னை கொல்லவந்த நபருக்கே மேன்மை தங்கிய ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன அவர்கள் மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருக்கின்றார். அதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். வெற்றி பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பை களைந்து பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களை வெல்ல இதுபோன்ற முன்னேற்ற கரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திருகோணமலையிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும் பௌத்த குருமார்கள் வடக்கிற்கு வந்து இதுபோன்ற நல்லிணக்க பணிகளை முன்னெப்பதனை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வணக்கங்கள். இந்த நாட்டில் புத்த பெருமானின் போதனை கடைபிடித்து ஒழுகினால் நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்தார். நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டிஆராய்ச்சி திருகோணமலை இராஜகிரிய ஆனந்த மகாநாயக்க தேரர் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.