குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தருமாறு என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாதம் குறித்த பகுதியில் பிரதேச மக்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சந்தையை பிரதேச சபையினரால் நிரந்தர சந்தை தொகுதியாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்களின் கொள்வனவுகளிற்காகவும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றை கவனத்தில்கொண்டு குறித்த சந்தையை நிரந்தர சந்தையாக மாற்றம் செய்து தருமாறு மக்கள் கோருகின்றனர்.
இதுவரை காலமும் விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரணைமடு சந்தை மற்றும் 6 கிலோ மீட்டரில் உள்ள கிளிநொச்சி சந்தைகளிற்கு சென்று சந்தைப்படுத்த வேண்டியுள்ளதாகவும், அதே வேளை தமது அன்றாட தேவைகளிற்காக குறிதத் ரு சந்தைகளிற்கும் சென்று பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டி காணப்படுவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள்
அதிக குடும்பங்கள் வசிக்கும் தமது கிராமத்திற்கான சந்தை ஒன்றை அமைப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எவரும் முன்வராத நிலையில் தாமே குறித்த பகுதியில் சந்தை ஒன்றை அமைத்துள்ளதாகவும்
இந்நிலையில் பிரதேச செயலாளர் தற்போது அமைந்துள்ள சந்தை காணியானது கூட்டுறவு சங்கத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கடிதம் அனுப்பியுள்ளார். அதே வேளை பிரதேச சபை செயலாளரும் இவ்விடயம் தொடர்பில் கரிசனை காட்டவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்திற்கான சந்தை அமைப்பதற்கு குறித்த பகுதியை ஒதுக்கி தருமாறும் இல்லையேல் பொருத்தமான பகுதி ஒன்றை தமக்கு தந்து தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.