166
ஆங்கிலேயரிடமிருந்து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை என்பதனால் இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பாடசாலை நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட போது தேசிய கொடியினை ஏற்ற மறுத்திருந்தார்.
அந்த சம்பவம் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. அந்நிலையில் அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுள் முரண்பாடுகள் இருக்கலாம். கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்துத் தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது.
அமைச்சர் சர்வேஸ்வரனின் ஆதங்கம் எனக்கும் இருந்து வந்துள்ளது. றோயல்க் கல்லூரியின் மூத்த போர்ப் பயிற்சிப் பள்ளி மாணவன் (Cadet) என்ற முறையில் 1959ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் எந்த ஒரு சுதந்திர விழாவிலும் நான் கலந்து கொள்ளவில்லை.
நீதியரசராக இருந்த போது அழைப்பிதழ் கிடைத்தும் நான் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. பிரதம நீதியரசர் சர்வானந்தா, வலிந்து என்னை அழைத்த போதும் நான் பங்குபற்றவில்லை. காரணம் ஆங்கிலேயரிடமிருந்து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை.
சென்ற வருடம் பெப்ரவரி மாதத்தில் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முடிவெடுத்த போது அவருடன் அதில் கலந்து கொள்ள நான் முன்வரவில்லை. எனவே தான் எனது எதிர்ப்பை அவ்வாறு நான் காட்டி வந்துள்ளேன்.
எனினும் இலங்கை மக்கள் அனைவரையும் மதிக்கும் விதத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வருகின்றேன். தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தி வருகின்றேன். இப்பொழுது தேசிய கீதம் தமிழிலேயே வடமாகாணத்தில் பாடப்படுகிறது.
ஆகவே அமைச்சர் சர்வேஸ்வரனின் ஆதங்கம் ஒரு விதத்தில் வெளிவந்துள்ளது. எனது ஆதங்கம் இன்னொரு விதத்தில் வந்து கொண்டிருக்கின்றது. அவரின் உணர்ச்சிகளை நான் புரிந்துள்ளேன்- மதிக்கின்றேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும். எமது மன வேதனையை அவ்வாறான புறக்கணிப்பால் எடுத்துக் காட்டாமல் விட்டிருக்கலாம் என்பதே என் கருத்து.
தேசியக் கொடி பௌத்தத்திற்கும் பேரினத்திற்கும் மிகக் கூடிய முக்கியத்துவம் அளித்து இந்த நாட்டின் முதல்க் குடியான தமிழர்களுக்கும் முதல் மதமான சைவத்திற்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் அந்தப் பிழையை தேசியக் கொடியையோ தேசிய கீதத்தையோ உதாசீனம் செய்து வெளிக்காட்டாது வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்பதே எனது கருத்து.
ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தேசியக் கொடியை எரிப்பதை ஒரு ஜனநாயக உரித்து என்றே பார்க்கின்றார்கள். அதைக் குற்றம் என்று கண்டு அவ்வாறு செய்வோரை அவர்கள் சிறைப்படுத்துவதில்லை.
எனவே தனது எதிர்ப்பை இவ்வாறு காட்டாமல் வேறு வழிகளில் எதிர்காலத்தில் காட்டுமாறு அமைச்சர் சர்வேஸ்வரனிடம் கோரிக்கை விடுவனே தவிர, அவருக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. தமிழ் மக்களின் மன வேதனையை சிங்களப் பெரும்பான்மை அரசு புரிந்து கொள்ளவேண்டும் .என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Spread the love