குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத அணுவாயுதத் தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்க அணுவாயுதப் பொறுப்பதிகாரி ஜெனரல் ஜோன் ஹைரன் (John Hyten ) தெரிவித்துள்ளார். கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் தங்களை முட்டாள்கள் என்று கருதுவதாகவும் தாம் முட்டாள்தனமான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மிக முக்கியமான பொறுப்புக்களை வகிக்கும் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதாகவும், ஜனாதிபதி என்ன செய்ய வேண்டுமென தமக்கு அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்தால் அது சட்டவிரோதமானது என தான் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்துவதாகவும் ஜோன் ஹைரன் தெரிவித்துள்ளார்.