எண்ணூர் கழிமுகப்பகுதி மற்றும் சிற்றோடைகளில் பிடிக்கப்படும் மீன்கள் மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவற்றில் விஷத் தன்மை இருக்கிறது என்று பிரபல சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறியிருக்கிறார்.
எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி உள்ள இடத்தில் பெரிய அளவில் கடல் கழிமுகப்பகுதி அமைந்துள்ளது. மேலும் அதையொட்டி ஆறுகள், சிற்றோடைகளும் அமைந்துள்ளன. அங்குள்ள அனல்மின் நிலையம் மற்றும் தொழிற்சாலைகளால் இந்த கழிமுகப்பகுதி கடுமையாக மாசுப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனும் அந்த பகுதியில் சுற்றிப்பார்த்து தனது அதிருப்பதியை வெளியிட்டார்.
அகமது இஸ்மாயில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபுணராகவும் இருந்து வருகிறார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் எண்ணூர் கழிமுகப் பகுதிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கிருந்து 60 மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்று ஆய்வுக்கு உட்படுத்தினார்.
இவற்றில் மீன்கள், இறால்கள், நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றில் தலா 20 உயிரினங்களை எடுத்து சென்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த உயிரினங்கள் அனைத்தின் உடலிலும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் உடலில் விஷத்தன்மை கொண்ட உலோகங்கள் அதிக அளவில் சேர்ந்து இருந்தன. பாதரசம், செம்பு, காட்னியம், செலினியம், ஆர்சனிக் ஆகியவை கலந்து இருந்தன.
மீன்களில் செம்பின் அளவு அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு 68.42 மில்லி கிராம் கலந்து இருந்தது. சிப்பிகளில் 66.18 மில்லி கிராம் கலந்து இருந்தது. இதுபோன்ற உலோகங்கள் கலந்திருக்கும் மீன்களை சாப்பிட்டால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், மேலும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.
கழிமுக நீரில் கலந்துள்ள சிலோநியத்தால் மீன்கள் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். நீரில் உயிரின வாழ்க்கை சீர்குலைந்து விடும் என்றும் கூறினார். இந்த கழிமுகப்பகுதியில் உள்ள தண்ணீரில் ஏராளமான ரசாயனங்கள் கலந்து உள்ளன. அதில் 17 ரசாயனங்களையும் எடுத்து சோதனை நடத்தி உள்ளனர். அவையும் அந்த நீரில் வாழும் உயிரினங்களை கடுமையாக பாதிக்கச் செய்து உள்ளது.