காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பு ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராகவும் உள்ளனர். தற்போது 70 வயதாகும் சோனியா காந்தி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. காங்கிரஸின் அனைத்து நடவடிக்கைகளும் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடர்கின்றன.
இந்தப் பின்னணியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராகுலை கட்சித் தலைவராக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக அந்த கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. அதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் முழு ஆதரவு அளித்துள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.