விசேட திண்மக் கழிவு அகற்றல் வேலைத்திட்டம் – 2017 20.11.2017 குருநகர் ஐந்தாம் மாடி குடியிருப்புப் பகுதியில்
யாழ் மாநகரசபையின் புதிய ஆணையாளர் திரு.ஜெயசீலன் அவர்களே, யாழ் பிரதேச செயலாளர் திரு.தயாநந்தன் அவர்களே, எனது அமைச்சின் செயலாளர்களே, உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களே, ஏனைய உயர் அதிகாரிகளே, யாழ்ப்பாணம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களே, உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகத்தர்களே, இந்த நிகழ்வில் பங்கு பற்றுவதற்காக வருகை தந்திருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளே!
தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடபகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் மற்றும் மலேரியா நோய்த் தாக்கங்கள் விரைவாகப் பரவி வருவது பற்றி சுகாதார அமைச்சும் யாழ்ப் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் அலாரம் அடித்த வண்ணம் உள்ளனர்.
குப்பை கூழங்களை நாமே அகற்றி புனிதமான நகரை உருவாக்குவோம் என்ற விசேட செயற்திட்டம் ஒன்றினை நாம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளோம். இந்நிலையில் யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெருமளவில் குவிந்து கிடக்கும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கென விசேட திண்மக் கழிவு அகற்றல் செயற்திட்டம் ஒன்றினை 20.11.2017 அதாவது இன்று முதல் 24.11.2017 வரை யாழ் மாநகரசபை, மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து கொண்டு நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன. இவ்வாறு நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை கொண்டுவர எத்தனித்துள்ளோம். பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய டெங்கு மலேரியா போன்ற விரைவாகப் பரவி வரும் நோய்த் தாக்கங்களிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களை ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்த்தெடுப்பதற்கு வழிவகுக்குந் திட்டமிதுவாகும்.
இவ் விசேட வேலைத்திட்டம் ஒரு கால அட்டவணை அடிப்படையில் 20.11.2017 தொடக்கம் 24.11.2017 வரை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் அகற்றப் படாமல் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகளை அகற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டமாக முன்மொழியப் பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று குருநகர் ஐந்து மாடிக் குடியிருப்பிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வீதிவரை கடலில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை அகற்றுகின்ற நிகழ்வுகள் இப்போது ஆரம்பமாக இருக்கின்றன.
யாழ் மாநகரசபை முழு அளவில் நாளொன்றுக்கு சுமார் 70 மெற்றிக் தொன் வரையான திண்மக்கழிவுகளை அகற்றுகின்ற போதும் குப்பைகளின் தேக்கம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. இந் நிலையில் இக் குப்பைகள் விரைந்து அகற்றப்படாவிடில் சில காலத்தில் யாழ்ப்பாண நகரம் குப்பை மேடாகக் காட்சியளிக்கும். இதனால்த்தான் நான் அண்மையில் ஒரு அவசரக் கூட்டமொன்றைக் கூட்டி இதைப்பற்றி ஆராய்ந்தேன்.
நாங்கள் வகுத்த வேலைத்திட்டம் பற்றி பிரதேச செயலாளர்களுடன் அளவளாவிய போது அவர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வந்தது மட்டுமன்றி தமது அலுவலக உத்தியோகத்தர்களில் ஐம்பது பேர் வரை இவ் வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கித் தந்திருப்பது மனமகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் உதவி மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.
இன்றைய இந்த நிகழ்வானது பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வருகின்ற போதே திண்மக் கழிவு முகாமைத்துவத்தைத் திறம்பட நடாத்த முடியும். நான் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லும்போது சில விடயங்களை அவதானித்திருக்கின்றேன். கழிவுகள் அனைத்தும் விசேட கழிவகற்றல் பைகளில் இடப்பட்டு நாய்கள் இழுக்காத வகையில் உயரமான இடங்களில் வைத்திருப்பார்கள். மாநகரசபை வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதிக்கு வந்து அவற்றை எடுத்துச் செல்லுவன. ஆனால் எமது பகுதிகளில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் அல்லது வெறும் வளவுகளில் ஒரு உழவு இயந்திரம் நிரம்பக் கூடிய குப்பைகள் பைகளிலும் இடப்படாது முன் வாயில் ஓரங்களில் குவிக்கப்பட்டிருப்பன. அவற்றில் இருக்கும் உணவுக் கழிவுகளை நாய்கள் வீதி முழுவதும் இழுத்து அசிங்கப்படுத்தி விடுவன. படித்த, சமூகத்தில் நல்ல பதவியில் இருக்கும் சிலர்கூடத் தமது குப்பை கூழங்களைக் கொண்டு போய் வீதி ஓரங்களில் வீசிவிட்டுச் செல்கின்றார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான சமூகத்தின் பெரிய மனிதர்களைக் கோட்டுக்குக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்று அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் தமது ஒத்துழைப்புக்களை முழு அளவில் வழங்குகின்ற போதே திண்மக் கழிவு அகற்றல் நிகழ்வு சிறப்பாக அமையும். முடியுமான வரையில் காய்ந்த சருகுகள் போன்ற குப்பைகளை தோட்டத்தில் வெட்டித் தாக்க எமது மக்கள் முன்வர வேண்டும். நான் கொழும்பில் என் வீட்டில் தரையைக் கூட்டி வரும் கழிவுகளை இதற்கான தொட்டில்களில் இட்டு மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை சேதனப்பசளையைப் பெற்று வருகின்றேன்.
பொதுமக்கள் விடுகின்ற சிறு சிறு தவறுகள் நுளம்புப் பெருக்கங்களுக்குக் காரணமாகி விடுகின்றன. வீட்டிலுள்ள பழைய வாளிகள், பாற் பேணிகள், மீன் தகரங்கள், சிரட்டைகள் என்பவற்றில் தேங்குகின்ற மழை நீரில் நுளம்புக் குடம்பிகள் உற்பத்தியாவதன் மூலம் நுளம்புப் பெருக்கம் அதிகரிக்கின்றது. அதே போன்று வீட்டுக் கூரைகளுக்கு மேல் இருக்கும் குப்பை கூழங்கள் அகற்றப்படாத போது அங்கும் நுளம்புக் குடம்பிகள் உண்டாகும். உங்கள் சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி இவற்றுக்குக் கீழும் நுளம்புகள் உற்பத்தியாகலாம். இவற்றை நாம் சற்றேனும் அவதானித்து செயலாற்றும் போது நுளம்புப் பெருக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
தற்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிணறுகளை முழுமையாக வலைகளால் மூடி பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். தகரங்களால் மூடுவது கூட தவறு என்கின்றார்கள். கிணற்று நீரில் சூரிய வெளிச்சம் படவேண்டும் என்று கூறுப்படுகின்றது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு எமது அயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இவற்றைப் பற்றி எடுத்துக் கூற நாங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு அவர்களுக்குக் கூறுகின்ற போது அவர்களும் இவ்வாறான விடயங்களில் கூடிய அவதானங்களைக் கொண்டிருப்பார்கள். நாம் சேர்ந்து ஒத்துழைத்தால்த்தான் குப்பைகளை அகற்றலாம். நோய்களைத் தடுக்கலாம்.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் திண்மக் கழிவு மற்றும் டெங்கு நோய்க் கட்டுப்படுத்தல் தொடர்பான ஒரு கூட்டத்தில் உரையாற்றுகின்றபோது வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் காணப்படுகின்ற சிறு குழிகளில் தேங்கி நிற்கின்ற நீரிலிருந்து பல்லாயிரக் கணக்கான நுளம்புக் குடம்பிகள் உருவாவதற்கு வாய்ப்புக்கள் உண்டெனவும் இக் குழிகளை சீமெந்து இட்டு மூடுவதற்கு நூறு ரூபா கூடச் செலவாகாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். நான் அவதானித்த அந்த ஒரு கடையின் முன்பு காணப்பட்ட குழி தற்போது சீமெந்து இட்டு மூடப்பட்டுள்ளதாக எனது உத்தியோகத்தர்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவ்வாறு எம்முடன் ஒத்துழைத்தவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக! அவர் போன்று மற்றைய சகோதர சகோதரிகளும் நோய்த் தடுப்பு விடயங்களில் தகுந்த கரிசனை காட்ட வேண்டும். எனது உரை ஒருவரையாவது சிந்திக்க வைத்துள்ளது என எண்ணிப் பெருமையடைகின்றேன். அந்த ஒருவரின் முன்னுதாரணத்தில் ஏனைய வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்படுகின்ற குழிகளை மூடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். நாம் எல்லோரும் சேர்ந்ததே இந்த யாழ்ப்பாண நகரம். எமக்குள் ஒற்றுமை வேண்டும். விட்டுக் கொடுப்பு வேண்டும். அப்போது தான் நாம் யாவரும் இந்த நகரத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சீரிய சுற்றுச் சூழல் உடையதாகவும் மாற்றலாம். இன்று நாம் தொடங்கியுள்ள இந்தச் செயற்திட்டம் முழு வெற்றி அளிக்க வாழ்த்துகின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்