2018-ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இந்த ஆண்டு இதுவரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் 6 நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன எனவும் அடுத்த ஆண்டில் 7 ரிக்ரர் புள்ளிகளுக்கு மேல் 20 நிலநடுக்கங்கள் வரை ஏற்படலாம் எனவும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் பூமியின் எந்த பகுதியில் ஏற்படும் என்பதை கணிக்க முடியாது எனவும் எனினும் பூமத்திய ரேகை பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வோசிங்டனில் நடைபெற்ற அமெரிக்க புவியியலாளர்கள் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம், பென்ரிக் பல்கலைக்கழக பேராசிரியை ரெபேக்கா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1900-ம் ஆண்டு முதல் இப்போது வரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலநடுக்கங்களை ஆய்வு செய்ததாகவும் இதில் குறிப்பிட்ட 5 காலக்கட்டங்களில் ஆண்டுக்கு 25 முதல் 30 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் இதர காலகட்டங்களில் ஆண்டுக்கு 15 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் ஆய்வின்படி எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்ததோ அப்போது அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பூமியின் சுழற்சிக்கும் நிலநடுக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பூமியின் சுழற்சி வேகம் சிறிது குறைந்துள்ளது எனவும் இதனை அணு கடிகாரங்கள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும் எனவும் தெரிவித்த அவர்கள் சுழற்சி வேகம் குறைந்திருப்பதால் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் சக்தி வெளிப்படும் எனவும் இதனால் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.