ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மியான்மர் நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார். மியான்மாரில் பௌத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதில் பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் 5 லட்சத்துக்கும் Nமுற்பட்டோர் மியான்மாரிலிருந்து பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மியான்மர் அரசின் இந்த ராணுவ அடக்குமுறைகளை ஐ. நா உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் மியான்மரில் வன்முறை குறித்து தவறான புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என தெரிவித்த ஆங் சான் சூச்சி ஒரு மாதத்துக்குப் பிறகு கலவரம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருந்தார்
இந்த நிலையில் மியான்மர் தலைநகரம் நைப்பியிதோவில் இன்று இடம்பெற்ற ஆசிய – ஐரோப்பிய கூட்டத்தில் ராக்கைன் மாவட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆங் சான் சூச்சி பதிலளித்துள்ள நிலையிலேயே ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.