ஜிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா அறிவித்துள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது எனவும் சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது எனவும் முகாபே எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு பாராளுமன்றத்தில் விவாதத்தினை ஆரம்பித்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவிநீக்க நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியபிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபேதான் ஜனாதிபதியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.