யாழில்.உள்ள கடைசி வாள் வெட்டு குழு உறுப்பினரை கைது செய்யும் வரை பொலிஸ் வேட்டை தொடரும் என யாழ்.மாவட்ட பிரதி காவற்துறை அதிபர் ரொசான் பெனார்ன்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த நாட்களில் காவற்துறையினாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வரையில் சந்தேகத்தில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பலரை காவற்துறை பிணையில் செல்ல அனுமதித்துள்ளோம். தேவை ஏற்படின் அவர்களை மீள கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
எமது இலக்கு வாள் வெட்டுகுழுக்களே . அவர்களை நாம் அடையாளம் கண்டு உள்ளோம் அவர்களின் விபரங்களை பெற்று உள்ளோம். அந்த குழுக்களை சேர்ந்த கடைசி உறுப்பினரை கைது செய்யும் வரையில் எமது தேடுதல் வேட்டை தொடரும். அதனால் மக்கள் வீணாக பதட்டமடையவோ குழம்பவோ தேவையில்லை.
இளவாலை, அச்சுவேலி, காங்கேசன்துறை, பலாலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வாள் வெட்டு சந்தேக நபர்களை போலீசார் தேடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன் போது 10க்கும் மேற்பட்டவர்களை காவற்துறையினர் கைது செய்தனர். அதில் பலரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் இரவே காவற்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏனையவர்களை காவற்துறை நிலையங்களில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தேவை ஏற்படின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.