குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இளைஞனை தாம் கடத்த வில்லை எனவும் , குறித்த இளைஞனை கைதே செய்தோம் என கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பேருந்துக்காக காத்திருந்த இளைஞன் ஒருவனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடந்து சென்றதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
அது தொடர்பில் கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். ஆவா குழுவில் சேர்ந்து இயங்குபவரும் , அக் குழுவினருக்கு தகவல் வழங்குபவரும் எனவும் யாழ்.நகரை அண்டிய பிறவுன் வீதியை சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன் (வயது 17) என்பவர் பற்றி எமக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்வதற்கு தாம் பல தடவைகள் சென்ற போதிலும் , எம்மை கண்டதும் தப்பியோடி தலைமறைவனார். அந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் குறித்த நபர் நிற்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் வான் ஒன்றில் குறித்த சந்தேக நபரை கைது செய்து கோப்பாய் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தோம்.
காவல் நிலையத்தில் தடுத்து வைத்து குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது ஆவா குழு பற்றிய பல தகவல்களை தெரிவித்தார்.
அதேவேளை சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்றைய தினம் புதன் கிழமை அவரது வீட்டில் நடத்திய தேடுதலில் , மானிப்பாய் பகுதியில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் ஒன்றினையும் மீட்டு உள்ளோம். குறித்த சந்தேகநபரிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.