சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கும் நெதர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஜொஹானே டொர்னேவார்ட் ( Joanne Doornewaard ) க்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையை பூர்வீகமாக கொண்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பெற்றோரைத் தேடும் பிள்ளைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ,இலங்கைக்கு பெற்றோரைத் தேடிவரும் பிள்ளைகளுக்கு கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துடன் இணைந்து டீ.என்.ஏ பரிசோதனையை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சுமார் 4000 பிள்ளைகள் நெதர்லாந்து,டென்மார்க்,சுவீடன், மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வசிப்பதாகவும்,இவர்கள் தமது பெற்றோரைத் தேடி இலங்கைக்கு வரும்பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் சில வாரங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.