குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.நகரில் இயங்கும் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணத்தினை பெற்று மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இளம் பெண்ணை நீதிவான் பிணையில் செல்ல அனுமதித்தார். யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து 3 இலட்சத்து 85ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்தார் என யாழ். காவல்துறையினரால் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்காக யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிகாரர் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகள் தங்க நகைகள் தான். தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தினை பெற்றுக்கொண்டார்.
குறித்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரே தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்ததாகவும் , தனது கட்சி காரரின் கையொப்பத்தை போலியாக வைத்து உள்ளதாகவும் , இவை தொடர்பில் நிதி நிறுவன முகாமையாளருக்கு தெரிவித்த போதிலும் அவர் நடவடிக்கை எடுக்க வில்லை என மன்றில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சந்தேக நபரான இளம் பெண்ணுக்கு பிணை வழங்கியதுடன் வழக்கினை ஒத்திவைத்தார்.